Published : 17 Apr 2014 11:23 AM
Last Updated : 17 Apr 2014 11:23 AM

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க 30 ஆயிரம் பேர் கொண்ட 5,360 நடமாடும் குழுக்கள்

தேர்தலுக்கு முந்தைய கடைசி மூன்று அல்லது நான்கு நாளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வதைத் தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட 5,360 நடமாடும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:

உலகப்புகழ் வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சார சி.டி.யை முதல்முறையாக வெளியிட்டிருக் கிறோம். அதுபோல், தலைமை தேர்தல் அதிகாரி முதல்முறையாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் சி.டி.யும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகளைப் பொருத்தவரை, கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க முதல்முறையாக நடமாடும் சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு முந்தைய 3 அல்லது 4 நாட்களில்தான் வாக்காளர்களுக்கு முழுவீச்சில் பணம் விநியோகிக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன. அதனால் முதல்முறையாக, கடைசிகட்ட பணப் பட்டுவாடாவைத் தடுக்க மண்டலத்துக்கு ஒரு கண்காணிப்புக் குழு வீதம் தமிழகம் முழுவதும் 5,360 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

30 ஆயிரம் பேர்

ஒரு மண்டலத்தில் 10 வாக்குச் சாவடிகள் இடம்பெறும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு மண்டல அதி காரி, ஒரு உதவியாளர், 4 மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழக போலீஸார் இடம் பெற்றிருப்பர் (மொத்தம் சுமார் 30 ஆயிரம் பேர்). இந்தக் குழுவினர் வரும் 20-ம் தேதியில் இருந்து தங்களது பணிகளைத் தொடங்குவர்.

இதுவரை பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புப் படை மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை மட்டும் கண்காணித்து வந்தோம். புதி தாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடமாடும் குழுவினர், பண விநியோகத்தைத் தடுக்கும் பணிகளில் கடைசி நான்கு நாள்களில் தீவிரமாக ஈடுபடுவர். பண விநியோகம் பற்றி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்தால் போதும், இவர்களுக்கு அத்தகவல் தெரிவிக்கப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படும்.

எஸ்எம்எஸ்-ல் நினைவூட்டல்

தமிழகத்தில் முதல்முறையாக, வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம், ‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’ என்றும், வாக்குப்பதிவு தினத்தன்று காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு, ‘வாக்களித்து விட்டீர்களா’ என்றும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப உள்ளோம். எங்களிடம் உள்ள 60 லட்சம் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு இந்த நினைவூட்டல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

இதுதவிர, எப்.எம். ரேடியோ மற்றும் தனியார் தொலைக் காட்சிகளிலும் ‘வாக்களித்து விட்டீர்களா’ என்ற நினைவூட்டல் விளம்பரங்களை ஒலி, ஒளிபரப்ப அனுமதி கேட்க இருக்கிறோம்.

தொகுதிக்கு 10 வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதி யிலும் குறைவான வாக்குப்பதிவு நடந்த 10 வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு

தேர்தல் நாளன்று ஊழியர் களுக்கு விடுமுறை தரவேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி, விடுப்பு தர மறுக்கும் நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். விடுப்பு தராத நிறுவனம் குறித்து ஊழியர்கள், எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு (1950) புகார் அளிக்கலாம்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

நல்ல கத்தரிக்காய்..

வாக்களிப்பதை வலியுறுத்தி தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேசும் விழிப்புணர்வு சி.டி. வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘கடைக்குப் போனால் நல்ல கத்தரிக்காய் வாங்குகிறோம். அதுபோல், வாக்காளர்கள் பணம், மது போன்றவற்றுக்கு மயங்காமல், நல்ல வேட்பாளர்களுக்கு மனசாட்சிப்படி ஓட்டு போட வேண்டும். இல்லையேல் ‘நோட்டா’வுக்கு போடலாம்’’ என்று பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x