

தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கூடுதல் காவல் ஆணையர் நல்லசிவம் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
தமிழகத்தில் வருகிற 24-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 925 பதற்றமான வாக்குச்சாவடிகளில், 330 வாக்குச்சாவடிகள் சென்னையில் உள்ளன. வெளிமாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துவிட்ட தலைவர்கள் சனிக்கிழமையில் இருந்து சென்னையில் பிரச்சாரம் செய்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா மத்திய சென்னையிலும், திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வடசென்னையிலும் சனிக்கிழமை பிரச்சாரம் செய்கின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் தேர்தல் பாதுகாப்பை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூடுதல் ஆணையர் நல்லசிவம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 40 உதவி ஆணையர்கள், 120 காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்களை நிறுத்த சோதனை சாவடிகளில் வைக்கப்படும் தடுப்பு கம்புகள்போல, வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பாதுகாப்பு தடுப்பு கம்புகள் வைக்கப்பட்டு வருகிறன்றன. தேர்தலில் முதன்முறையாக இந்த பாதுகாப்பு முறை பின்பற்றப்படுகிறது.