Published : 16 Apr 2014 08:07 AM
Last Updated : 16 Apr 2014 08:07 AM
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் 22-ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரச்சாரத்துக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சோனியா வருகை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வருகிறார். பின்னர் காரில் கன்னியாகுமரி அருகே முருகன்குன்றம் என்ற இடத்துக்கு வருகிறார். அங்கு நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் உள்பட தென்மாவட்டங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் திரும்பும் சோனியா காந்தி, அங்கிருந்து ஆந்திரா புறப்பட்டுச் செல்கிறார்.
3 இடங்களில் மோடி
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கூட்டணி அமைவதற்கு முன்பு ஏற்கெனவே 2 முறை தமிழகம் வந்து சென்றார். கூட்டணி அமைந்தபின் முதல்முறையாக கடந்த 13-ம் தேதி சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மீண்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக மோடி இன்று தமிழகம் வருகிறார். பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று பிற்பகல் கிருஷ்ணகிரி வரும் மோடி, அங்கு நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அந்தத் தொகுதி பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்துப் பேசுகிறார்.
பின்னர் சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அந்த தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்துப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் மோடியுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து கோவை செல்லும் மோடி, கொடிசியா மைதானத் தில் இரவு 7 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ண னுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக் கிறார்.
2-ம் நாள் பிரச்சாரம்
இன்றிரவு கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் நரேந்திரமோடி, நாளை (வியாழக் கிழமை) ஹெலிகாப்டரில் ஈரோடு சென்று மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொள்கிறார்.
பின்னர் ராமநாதபுரம் செல்லும் மோடி, பாஜக வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்துப் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் சென்று, கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் அகமதாபாத் திரும்புகிறார்.
பலத்த பாதுகாப்பு
இரு தேசிய கட்சிகளின் தலைவர்கள் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற் கொள்வதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற் காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகம் வருவார்கள் என கூறப்பட்டது. ஆனால், அவர்கள் வருகை பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய ராகுல்காந்தி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT