தலைமை நீதிபதி பேச்சு அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம்: திமுக தலைவர் கருணாநிதி கருத்து
ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக் கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சர்ச்சசை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ம் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜீவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளி வந்தது.
வரும் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
உகந்ததுதானா?
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
