

கட்சிக்குள் யாரேனும் குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முனிரத்தினம், வாலாஜா அசேன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், பாலூர் சம்பத் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இதுபற்றி எந்தவிதமான உத்தரவும் வரவில்லை என்பதால், அவர்கள் தொடர்ந்து கட்சிப் பணியாற்றலாம் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அறிவித்திருந்தேன்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தல் பணியாற்றக் கூடாது என்று சிலர் கூறி கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது கட்சிக்கு விரோதமான செயலாகும். இதுபோன்று செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் ஞானதேசிகன் கூறியுள்ளார்.