Published : 23 Apr 2014 09:47 AM
Last Updated : 23 Apr 2014 09:47 AM

நீலகிரியில் 2-வது முறையாக மகுடம் சூடுவாரா ராசா?- நெருக்கடி அளிக்கும் அ.தி.மு.க.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியை 2-வது முறையாக கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் ஆ.ராசாவுக்கு, கடும் போட்டி அளிக்கிறது அ.தி.மு.க.

நீலகிரி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ஆம்-ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 10 பேர் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியின் வேட்புமனு, தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 86 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணனை தோற்கடித்தார். இந்த முறை அ.தி.மு.க. நேரடியாக களமிறங்கியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் எதிரொலியாக சர்வதேச நாடுகளும் நீலகிரியை கண்காணித்து வரும் நிலையில், அ.தி.மு.க.-வின் பிரதான பிரச்சாரம் ராசாவுக்கு எதிராகவே அமைந்திருந்தது.

தொகுதியில் ராசாவுக்கு செல்வாக்கு இருப்பதால், அதை கடந்து வெற்றி பெற அ.தி.மு.க. சார்பில் ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் பணிகள் துவக்கப்பட்டன. கடந்த ஜனவரியில் குன்னூரில் நடந்த அரசு விழாவில், நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.117 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் நீலகிரி தொகுதியைச் சேர்ந்த கே.ஆர்.அர்ஜுணன், ஏ.கே.செல்வராஜ் இருவருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை அ.தி.மு.க. தலைமை வழங்கியது.

தேர்தல் பொறுப்பாளர்களாக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி அ.தி.மு.க.-வுக்கு சாதகமாக கருதப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டதால், ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தினர் வாக்குகளும் தி.மு.க.-வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பா.ஜ.க. 18 ஆயிரம் வாக்குகளும், தே.மு.தி.க. 76 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தன. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகள் இருப்பதால், இந்த வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடந்த சில நாள்களாக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்ததால் அ.தி.மு.க.-வுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ.க., தே.மு.தி.க.-வின் வாக்குகள் சிதறும் நிலை உருவாகியுள்ளது. இதுதவிர காங்கிரஸ், ஆம்-ஆத்மி கட்சிகளும் வாக்குகளை பிரிப்பதால் தி.மு.க.-வுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது.

அதேசமயம் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மலைப்பகுதி தொகுதிகளில் தி.மு.க.-வுக்கு சாதகமான நிலையும், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய சமவெளிப் பகுதி தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க., சம பலத்திலும் உள்ளன. இதன் அடிப்படையில் நீலகிரியில் அ.தி.மு.க.-வை முந்துகிறது தி.மு.க.

இருப்பினும், புதிதாக வாக்களிக்கவுள்ள ஒரு லட்சம் பேர் ஆதரிக்கும் கட்சியின் வேட்பாளரே வெற்றி பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x