Published : 12 Apr 2014 01:49 PM
Last Updated : 12 Apr 2014 01:49 PM

நான் விலை போகவில்லை: நீலகிரி பாஜக எஸ்.குருமூர்த்தி

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குப் போட்டி யிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பா.ஜ.க. எஸ்.குருமூர்த்தி, மாற்று வேட்பாளர் அன்பரசன் ஆகியோரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மூன்று முறை தேர்தலில் போட்டியிட்ட எஸ். குருமூர்த்தி, அங்கீகார படிவங்கள் சமர்ப்பிக்காததால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசியல் வட்டாரத்தில் இது சந்தேகத்தை கிளப்பியது. இவர் விலைபோனதாக பாஜக கூட்டணிக் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

வெள்ளிக்கிழமை குன்னூர் வந்த எஸ்.குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. பணம் வாங்கியதாக நிரூபிக்கப்பட்டால் நான் எனது தேசிய செயற்குழு பதவியை ராஜினாமா செய்யத் தயார். நான் அதிமுக.வில் சேருவதாகக் கூறுவது தவறானது. நான் என்றும் பாஜக.வில்தான் இருப்பேன்.

கட்சி அங்கீகாரப் படிவங்கள் எனக்கு 4-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கிடைத்தது. அதை நான் எனது தேர்தல் முதன்மை ஏஜெண்ட் வரதராஜனிடம் ஒப்படைத்துவிட்டேன்.

இந்நிலையில் 5-ம் தேதி மாலை படிவங்களை சமர்ப்பிக்க ஆட்சியர் அலுவலகம் வரும்போது வாகனத்தில் பழுது ஏற்பட்டு காலதாமதமானது. மாவட்ட ஆட்சியர் படிவங்களை ஏற்றிருக்கலாம். ஆனால், அவர் வேண்டுமென்றே படிவங்களை வாங்காமல் தவிர்த்தார். மேலும் 5-ம் தேதி மாலைக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வேட்பு மனு தள்ளுபடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x