வைகோ முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பார்: ராஜ்நாத் சிங்

வைகோ முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பார்: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது, ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமே இருக்க மாட்டார். மாறாக, அரசாங்கத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் அவர் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன், என விருதுநகரில் வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் பேசியதாவது: "வைகோ, சில ஆயிரம் வாக்குகளில் வென்றால் போதாது; அவர் லட்சம் வாக்குகளுக்கும் மேல் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள், அடிப்படையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற வகையில்தான் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அனைவருக்கும் சமநீதி என்று பாரதிய ஜனதா கட்சி சொல்லுவதைத் திசை திருப்ப முயல்கின்றார்கள். இந்தியாவின் அனைத்துக் குடிமக்களையும் ஒருசேர அரவணைத்துச் செல்வோம். இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்கிக் காட்டுவோம்.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பொறுப்பு ஏற்கப் போவது போல், அடுத்து இந்தத் தமிழகத்தில் எப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், இங்கே உருவாகி இருக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும்; அதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்து இருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்து இருக்கும். ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

தமிழக மீனவர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து இந்திய மீனவர்களுக்கும் நான் ஒரு உறுதிமொழி அளிக்க விரும்புகிறேன். மத்தியில் நம்முடைய அரசு அமைந்தவுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேசிய மீனவர் நல வாரியம் அமைப்போம்; அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்" இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in