

அ.தி.மு.க. ஆட்சியில் ஹெலிபேட் அமைத்ததில்தான் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக நடிகை குஷ்பு பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மஞ்சூர், உதகை, கோத்த கிரி பகுதிகளில் செவ்வாய்க் கிழமை அவர் பிரச்சாரம் செய்தார்.
உதகை ஐந்துலாந்தர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியது:
மின்வெட்டு பிரச்சினைக்கு 3 மாதங்களில் தீர்வு காண்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாகியும் தீர்க்கவில்லை. தற்போது நாளொன்றுக்கு 14 மணி நேர மின்வெட்டு அமல்படுத் தப்படுகிறது. இல்லாத மின்சாரத் துக்கு மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் தொழில் துறை முடங்கியுள்ளது. இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விலைவாசி யும் கடுமையாக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும், கொடநாடு எஸ்டேட் மக்கள் செல்லும் பாதையை திறக்காத ஜெயலலிதா, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா? வெற்றி பெற்றதும் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாகக் கூறினார். ஆனால் ஹெலிபேட் அமைத்ததில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு 40 ஹெலிபேட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவிடம் அரசியல் நாகரீகம் இல்லை. கடந்த தேர்தல்களில் வைகோ, விஜயகாந்த் ஆகியோரை தூக்கி எறிந்ததே இதற்கு உதாரணம். பிரதமர் கனவில் மிதக்கும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஊழல் குறித்து பேசும் அவர் மீது 19 ஆண்டுகளாக சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது என்றார்.
கருணாநிதி கை காட்டுபவர்தான் அடுத்த பிரதமர். எனவே தி.மு.க.-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.