

தேசிய ஜனநாயக கூட்டணியில் முரண்பாடுகள் இருந்தாலும் அக்கூட்டணியின் வெற்றி உறுதி என்று காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் மதிமுக சார்பில் காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அளவிலான தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழருவி மணியன் பேசியதாவது: தமிழகத்தில் முதன் முதலாக கடந்த 1967ம் ஆண்டு தான் கூட்டணி அமைத்து அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. அப்போது ஓரணியில் இருந்த திமுக- ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிளிடையே கொள்கை ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. ஆனால் இந்த 4 கட்சிகளின் நோக்கம், தமிழகத்தில் காங்கிரஸ் அரசை விரட்ட வேண்டும் என்பதாக இருந்தது. அதில் அக்கூட்டணி வெற்றியும் கண்டது.
அதே போலத்தான் தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியும். இக்கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கொள்கை அளவில் முரண்பாடுகள் இருந்தாலும் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தோல்வி பயம் காரணமாக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. பிரதமராக வேண்டும் என ஜெயலலிதா நினைப்பது அர்த்தமற்ற கற்பனை. தேசிய அளவில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை. பாஜக தான் ஆட்சியமைக்கப் போகிறது என்றார் அவர்.
பாமக மேற்கு மாவட்ட செயலர் சங்கர், மதிமுக நகரச் செயலர் வளையாபதி, தேமுதிக நகரச் செயலர் சண்முகசுந்தரம், பாமக முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதிமுகவின் தொகுதி அளவிலான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் தமிழருவி மணியன். உடன் வேட்பாளர் மல்லை சத்யா.