Published : 23 Apr 2014 09:00 AM
Last Updated : 23 Apr 2014 09:00 AM
நாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட, அதிமுகவுக்கு எல்லோரும் குறிப்பாக, இளம் தலைமுறையினர் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெய லலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 3 முதல் 37 பொதுக்கூட்டங்களிலும் சென்னை பெருநகரில் 17 இடங்களிலும் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த என்னுடைய கனவுகளையும் கவலைகளையும் திட்டங்களையும் பற்றி எடுத்துக் கூற வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு எதுவும் இல்லை. உங்கள் வளர்ச்சிதான் எனது மகிழ்ச்சி. உங்களுடைய உயர்வுதான் எனக்கு நிம்மதி. எனவேதான், என் ஆட்சிக் காலம் என்பது ஏழை, எளிய மக்களுக்காகவும் சமூக நீதி காப்பதற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உயர்வுக்கும் தொண்டு செய்வதாக எப்பொழுதும் அமைகிறது.
முன்னோடி மாநிலம்
விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை என பல எண்ணற்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மாணவ, மாணவிகள் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி பெற இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படாத வகையில் பல்வேறு உதவிகளும், வசதிகளும் எனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக்கணினி வழங்கி வருவதன் மூலம் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலகிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கருணாநிதி துரோகம்
தமிழகத்தில் பலமுறை ஆட்சி நடத்திய திமுக, தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பின் காரணமாக கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தது. ஆனால், கருணாநிதி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தமிழர்களுக்கு எண்ணற்ற துரோகங்களையும் தீமைகளையும்தான் செய்தார்.
கருணாநிதியின் சுயநல, வஞ்சக போக்குக்கு எடுத்துக்காட் டுகள்தான் உலக அரங்கில் தமிழர்களை தலைகுனியச் செய்த ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலும், இலங்கையில் அப்பாவி தமிழ்மக்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதற்கு அவர் பங்கேற்ற கூட்டணி அரசு வழங்கிய ஆயுதமும், ஆதரவும். கருணாநிதியின் எண்ணத்தில் மேலோங்கி இருப்பது தமிழர்களின் நலன் அல்ல; தன் குடும்பத்தின் நலன் மட்டுமே.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசலில் ஆரம்பித்து வெங்காயம் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்தது. பணவீக்கம் உயர்ந்தது. இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, உங்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாடு முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்படவும், தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், தமிழகத்துக்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடமிருந்து கிடைத்திடவும், புதிய மத்திய அரசில் அதிமுக வலுவான முறையில் பங்கேற்பதன் அவசியத்தை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
இளம் தலைமுறையினர்
எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி யிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்குகளின் முக்கியத் துவத்தை உணர்ந்து அதிமுகவை வலுப்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT