Published : 19 Apr 2014 03:30 PM
Last Updated : 19 Apr 2014 03:30 PM
எப்போதும் பிறரது துயரங்களைக் களைந்திட முயற்சி செய்திட வேண்டும் என்ற இயேசுபிரானின் உயரிய போதனைகளைப் பின்பற்றி நடந்திட உறுதி மேற்கொள்ள வேண்டும் என் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய திருநாளில் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவிட வேண்டும், பகைவரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான், சிலுவையில் அறையப்பட்டு பின்பு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது புனித நூலான பைபிளின் வாசகங்களை வாக்கிலும், மனதிலும் நிலைநிறுத்தியவர்களாய் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து கர்த்தராகிய இயேசு பிரானை வழிபடுவார்கள்.
ஆண்டவனின் பிள்ளைகளாகிய மக்கள் அனைவரும் மனிதநேயம் கொண்டவர்களாய் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் பிறருக்கு துன்பங்கள் இழைத்திடாமல் வாழ்ந்து, எப்போதும் பிறரது துயரங்களைக் களைந்திட முயற்சி செய்திட வேண்டும் என்ற இயேசுபிரானின் உயரிய போதனைகளைப் பின்பற்றி நடந்திட உறுதி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT