Published : 14 Apr 2014 04:46 PM
Last Updated : 14 Apr 2014 04:46 PM

பாஜகவின் மதவெறி அரசியலை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?- டி.ராஜா கேள்வி

'காவிரி பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தை கருத்தில் கொண்டு பேசிய ஜெயலலிதா, பாஜகவின் மதவெறி அரசியலை விமர்சிக்காதது ஏன்?' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, திருப்பூர் - காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

"பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது என்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வருவதற்கு ஒப்பான ஒன்றாகும். காங்கிரஸ் பின்பற்றிய பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொள்கைகளில் பா.ஜ.க.வும் ஒத்துப்போகிறது. எனவே, நாடு எதிர்பார்ப்பது காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மக்கள் நலன்சார்ந்த அரசியல் மாற்றத்தை. அதை ஏற்படுத்த இடதுசாரிகளான நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.க. குறித்து பேசியிருப்பதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தை கணக்கில் கொண்டு பேசியிருக்கிறார். மாறாக, பா.ஜ.க.வின் மதவெறி அரசியலை விமர்சிக்கவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவின் ஆட்சி அதிகாரம் பா.ஜ.க.விற்கு கைக்கு போகலாமா? அதைப் பற்றி தமிழக முதல்வர் பேசியிருக்கிறாரா? இல்லையே.

ரஜினி - மோடி சந்திப்பு பெரிய விஷயமல்ல!

ரஜினியும் மோடியும் சந்திந்தது பெரிய விஷயமில்லை. ஜனநாயக நாட்டில் யாரும், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி தனக்கு தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் மோடி சிறந்த நிர்வாகி என பேசி இருக்கிறார். இந்த சந்திப்பிற்கான முக்கியத்துவம் எவ்வளவு என்பது குறித்து, அவர்கள்தான் விளக்கவேண்டும்.

ஆனால், இன்றும் குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் அடங்கி வாழ்ந்து வருகிறார்கள். குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கிறார்கள். மோடி நல்ல தலைவர் என்பது மக்கள் நலன் சார்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் பெரு முதலாளிகள் நலன் சார்ந்துதான் மோடி சிந்திக்கிறார். இந்தியாவில் இருக்கும் அனைத்து பிரச்சினைக்களுக்கும் தீர்வு இருப்பதாக சொல்கிறார். நல்ல நிர்வாகம் என்பது மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதுதான்.

இடதுசாரிகள் வெற்றி பெற்றால்தான் பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி, தார்மீக ஒழுக்க நெருக்கடி போன்றவற்றில் இருந்து இந்தியாவை மீட்க முடியும். இடதுசாரிகளால்தான் இது சாத்தியம். இந்தியாவை காப்பாற்ற இடதுசாரிகளால்தான் முடியும்" என்றார் டி.ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x