

தமிழகம் முழுவதும் நோட்டாவுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க தலைவர் பூமொழி, நோட்டாவை கண்டு அசியல்வாதிகள் அஞ்சுவதாகக் கூறினார். சேலத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத் தலைவர் பூமொழி நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சேலத்தில் கடந்த மார்ச் 20-ம் தேதி நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கினோம். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நோட்டா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். 50 லட்சம் மக்களை சந்தித்துள்ளோம். புதிய வாக்காளர்களிடையே நோட்டாவுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சென்ற 12-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நோட்டோ விழிப்புண்வு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டோம்.
மொத்தம் 24 நாட்கள் செய்த நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 6 ஆயிரம் கி.மீ. பயணம் மேற்கொண்டோம். அரசியல்வாதிகள் முன்பு பொய் வாக்குறுதிகளை கொடுப்பதும், வெற்றி பெற்ற பின் எந்த நலத்திட்ட வசதிகளையும் மக்களுக்கு செய்து கொடுக்காமல் இருந்து வந்தனர்.
நோட்டாவால் அரசியல்வாதிகள் அச்சத்தில் உள்ளனர். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்யும் வசதி உள்ளதற்கான வாசகத்தை பூத் சிலிப்பில் அச்சிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி பேர் நோட்டா பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.