Published : 12 Apr 2014 04:20 PM
Last Updated : 12 Apr 2014 04:20 PM

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது: மணிசங்கர் ஐயர்

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் இருந்து மூன்று முறை எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மணிசங்கர் ஐயர் இம்முறை மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2009 மக்களவை தேர்தலில் மணிசங்கர் தோல்வியடைந்தார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பாஜக கூட்டணி, நரேந்திர மோடி, ஜாதி அரசியல் ஆகியன குறித்து அவர் அளித்த பேட்டி:

தேர்தலுக்குப் பின் காங்கிரசுக்கு திமுக ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து?

திமுக மட்டும் அல்ல. மோடி அரசுக்கு அனைவரும் அஞ்சுகின்றனர். மதச்சார்பற்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதே விருப்பம். திமுக சொன்னதை கருத்தில் கொண்டுள்ளோம். மே 16-க்குப் பிறகு அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் அமைந்திருப்பது வானவில் கூட்டணி என்கிறது பாஜக? உங்கள் நிலைப்பாடு?

இது ஒரு நல்ல நகைச்சுவை. பூஜ்யத்தை பூஜ்யத்தோடு கூட்டல் செய்தால் பூஜ்யம் தான் விடை. பாமகவும் தேமுதிகவும் எதிரும் புதிருமாக உள்ளன. தமிழகத்தில் அமைந்திருப்பது பாஜக தலைமையிலான கூட்டணி இல்லை தேமுதிக தலைமையிலான கூட்டணியாகும்.

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. அப்படியே ஏதாவது வெற்றி பெற்றாலும் அது கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பெறும் வெற்றியாகவே இருக்கும். இந்த வெற்றி கூட பொன்.ராதாகிருஷ்ணனின் தந்தை காமராஜரின் வலது கரமாக செயல்பட்டவர் என்பதற்காக விழும் வாக்குகளாகவே இருக்கும். எனவே, அது காங்கிரசுக்கு கிடைக்கும் மறைமுக வெற்றியாகும்.

பாஜக 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது பற்றி...?

முதலில், மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இரண்டாவதாக அப்படி அமைந்தாலும் அது நீடிக்காது, மூன்றாவதாக அப்படி நீடித்தாலும் நான் தொடர்ந்து போராடுவேன்.

மயிலாடுதுறை தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்கள்? இந்த தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். தே.ஜ.கூட்டணியில் இருக்கும் பாமக-வால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

மயிலாடுதுறையில் இதுவரை பாமக வெற்றி பெற்றதில்லை. கட்சி சார்ந்து ஓட்டளிக்க மயிலாடுதுறை தொகுதி மக்கள் விரும்பாததே இதற்கு காரணம். எனது தொண்டர்களே பலர் வன்னியர் சங்க உறுப்பினர்கள் ஆனால் அவர்கள் பாமகவில் இல்லை. வன்னியர்கள் இல்லாத ஏதாவது ஒரு கட்சியை எனக்கு காட்டுங்கள்.

21-ம் நூற்றாண்டில் ஜாதி அரசியலுக்கு வேலை இல்லை. வாக்களிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழை மக்கள் என்பதை உணர வேண்டும். ஏழைகள் நலன் சார்ந்த கொள்கைகளை வகுத்துக்கொள்ளும் வரை அரசியல் களத்தில் நீடிக்க முடியும்.

தமிழக முதல்வர் ஜெயலிதா காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாதையும் சுட்டிக்காட்டி பேசுகிறார். விவசாயிகள் அதிகம் நிறைந்த இப்பகுதியில், முதல்வர் கூறும் குற்றச்சாட்டால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

ஜெயலலிதா எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறார். இவ்விவகாரத்தில் அறிவியல் ஆய்வுகளுக்குப் பிறகே முதல்வர் இறுதி நிலைப்பாட்டை தெரிவித்திருக்க வேண்டும். நான் ஒன்றும் விஞ்ஞானி அல்ல ஆனால் நான் உண்மையின் பக்கம் இருக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வது திராவிட கட்சிகளின் பழக்கமாக உள்ளது. இதன் காரணமாக தேர்தல் வெற்றி பெறலாம் ஆனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

காவிரி பிரச்சினையை தீர்க்க ஜெயலலிதாவுக்கு விருப்பமில்லை. அரசியல் ஆதாயத்திற்காக அதை நீட்டிக்கவே அவர் விரும்புகிறார்.

தமிழில் பாரதி ஆனந்த்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x