Published : 13 Apr 2014 12:00 AM
Last Updated : 13 Apr 2014 12:00 AM

உண்மையைப் பேசினால் ஆபத்து: சோனி சோரி நேர்காணல்

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக இந்திய அரசு தொடுத்துள்ள போர் காரணமாக ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள், சத்தீஸ்கர் மாநிலச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர்மீது அற்பக் குற்றச்சாட்டுகளே பதிவாகியுள்ளன. விசாரணையின்றி நெடுங்காலமாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள், வழக்கம்போல போலீஸாரின் அடக்குமுறைகளுக்கும் சொல்லொணாத சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளனர். விசாரணை நடைபெறும் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.

சோனி சோரி என்ற இந்த ஆசிரியையின் விஷயத்தில் உச்ச நீதிமன்ற ‘பெஞ்ச்' தலையிட்டதால், கடந்த மாதத்தில் அவருக்கு நிரந்தர ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஆனால், அதுகூட, கடந்த இரண்டு ஆண்டுகளை வெவ்வேறு சிறைகளில் கழித்த பிறகே அவருக்குக் கிடைத்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் அரசு நடத்தும் பழங்குடிகள் பள்ளிக்கூடத்தில் சோனி சோரி ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்தார். மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தையாகச் செயல்படுவதாக சோனி சோரிமீதும் அவருடைய உறவினர்மீதும் குற்றம்சாட்டிக் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர். ஒரு தனியார் உருக்கு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மேலாளருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, இருவரும் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பெரும் பணத்தை அவ்வப்போது வாங்கித்தரும் வேலையைச் செய்துவருவதாகவும் அதுகுறித்த விசாரணைக்கு சோனி சோரி ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அபாண்டமான இந்தப் பழியிலிருந்து எப்படித் தப்புவது என்று ஆலோசனை பெறுவதற்காக சோனி சோரி டெல்லிக்குச் சென்றார். ஆனால், போலீஸார் அவரை 2011 அக்டோபர் 4-ம் தேதி டெல்லியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தடுத்து, கைதுசெய்தனர்.

தொடர்ந்து பலமுறை விண்ணப்பித்த பிறகு, சத்தீஸ்கர் போலீஸார் அவரைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லியில் உள்ள கீழமை நீதிமன்றம் அனுமதி தந்தது. சோரியும் அவருடைய உறவினரும் கைதுசெய்யப்பட்ட சில மாதங்களுக்கெல்லாம் இதே புகார் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட அந்தத் தனியார் உருக்கு நிறுவன ஊழியர்கள் இரண்டு பேருக்கு தண்டேவாடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், சோரிக்கும் அவருடைய உறவினருக்கும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் ஜாமீன் தர மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே சோனி சோரி, சத்தீஸ்கர் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. தன்னுடைய மகள்களைப் பார்த்துக்கொள்வதற்காக அவர் சத்தீஸ்கர் திரும்பிவிட்டார். இப்போது அவர் ஆம் ஆத்மி வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுகிறார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் செல்ல அஞ்சும் கிராமங்களுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார்.

‘தி இந்து’வுக்காக அவர் அளித்த நேர்காணலிலிருந்து…

அரசியலில் சேர வேண்டும் என்ற முடிவுக்குக் காரணம் என்ன?

பஸ்தரில் நிலவும் சூழல்களை மாற்ற வேண்டும் என்றால், அரசியல்தான் ஒரே வழி என்பதால் இந்த முடிவை எடுத்தேன். அரசியல்மூலம்தான் நான் அதிகாரத்தைப் பெற முடியும், நான் அதிகாரத்தைப் பெற்றால்தான் பஸ்தர் மக்களுக்கும் அதிகாரம் அளிக்க முடியும். என்னுடைய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பறிக்கப்பட்ட அவர்களுடைய சுதந்திரத்தை அவர்களுக்கு மீட்டுத்தர விழைகிறேன்.

ஆம் ஆத்மி கட்சியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் நெடிய போராட்டத்தை நடத்தினேன். எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் எனக்குத் துணையாக வரவில்லை. இந்த நிலையில், ஆம் ஆத்மிதான் என்னை அணுகியது. பஸ்தரில் என்னை வேட்பாளராக நிறுத்த விரும்புவதாக அந்தக் கட்சித் தலைவர்கள் கூறினர். இதன்மூலம்தான் மக்களை அணுக முடியும் என்பதால், இந்தக் கட்சியைத் தேர்வு செய்தேன். கட்சியின் முழு ஆதரவு எனக்கு இருக்கிறது. நான் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறேன்.

மக்களவைத் தொகுதி வேட்பாளர் என்ற வகையில் எதற்கெல்லாம் நீங்கள் முன்னுரிமை தர விரும்புகிறீர்கள்?

பஸ்தர் இப்போது போர்க்களமாகிவிட்டது. தாங்கள் செய்யாத தவறுகளுக்காக அப்பாவி பஸ்தர்வாசிகள் கொல்லப்படுகின்றனர். துப்பாக்கி ரவை இப்போது எல்லோருடைய வாழ்க்கையிலும் பரவிவிட்டது. பஸ்தர் என்னுடைய பிறந்த மண். இங்கு துப்பாக்கிகளுக்குப் பதிலாகக் கல்விதான் பரவ வேண்டும். ஜீரம் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த மோதல்களைப் பார்த்தவர்கள் சொல்கின்றனர், போலீஸுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுபவர்களில் கணிசமானவர்கள் பெண்களும் சிறுவர்களும் என்று. பெண்களும் சிறுவர்களும் துப்பாக்கி ஏந்துகின்றனர். குழந்தைகள் கைகளில் துப்பாக்கிகள் இருக்கக் கூடாது; பேனா, பென்சில்கள்தான் இருக்க வேண்டும். என்னைக் கைதுசெய்வதற்கு முன்னால் என்னுடைய பள்ளியில் 100 பிள்ளைகள் இருந்தார்கள். இப்போது 7 பேர்தான் இருக்கின்றனர். மற்றவர்களெல்லாம் எங்கே போனார்களோ?

உங்களுடைய அரசியல் பயணத்தில் எந்த மாதிரியான சவால்களை எதிர்பார்க்கிறீர்கள்?

அரசாங்கம் எனக்கு என்ன கொடுமைகளைச் செய்ததோ அவையெல்லாம் எனக்கு மட்டுமல்ல, மற்ற யாருக்கும் இழைக்கப்படக் கூடாது. நான் உண்மைகளை

அதிகம் பேசப் பேச எனக்கு ஆபத்தை அதிகம் வரவழைத்துக்கொள்வேன் என்று அஞ்சுகிறேன். அதற்காக இனியும் என்னால் பேசாமல் இருக்க முடியாது. உண்மை வெளிவந்தே தீர வேண்டும்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

அவர்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது? துப்பாக்கிகள் எந்தத் தீர்வையும் அளிக்காது. சமரசப் பேச்சுகள் மூலம் அமைதியைக் கொண்டுவருவதுதான் ஒரே வழி. போதுமான அளவுக்கு வன்செயல்களைப் பார்த்துவிட்டது பஸ்தர். இந்த ரத்தக்களரிக்கு முடிவுகட்ட நாம் கூட்டாகச் செயல்படுவோம். சிறையில் இப்போது அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான அப்பாவிப் பழங்குடிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறேன். ‘சகோதரி, பத்தாண்டுகளாக இந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறோம். எப்போது நாங்கள் வெளியே வருவது? உதவி செய்யுங்கள்' என்று சிறைக்கூடங்களில் என்னிடம் பலர் மன்றாடினர். ‘உலகம் உங்கள்மீது கவனம் செலுத்துகிறது, நம்பிக்கையோடு இருங்கள்' என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x