Published : 15 Apr 2014 05:19 PM
Last Updated : 15 Apr 2014 05:19 PM

தமிழக பிரச்சினைகளில் பாஜகவுக்கு அக்கறை இல்லை: மோடிக்கு ஜெயலலிதா பதிலடி

"தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் பாஜகவுக்கு அக்கறை இல்லை" என்று மோடிக்கு பதிலடி தரும் வகையில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பேசினார்.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்த பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, 'திமுக, அதிமுக இடையே சிக்கி தமிழக மக்கள் தவிக்கின்றனர். மக்களைப் பற்றி அந்தக் கட்சிகளுக்கு அக்கறையே இல்லை' என்று சாடினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழக மக்களின் வருத்தத்தை மோடி சம்பாதிப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், தமிழத்தின் முக்கியப் பிரச்சினைகளில் பாஜகவுக்கு அக்கறை இல்லை என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

ஆரணி மக்களவைத் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:

"மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் ஒன்பது ஆண்டு காலம் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. 2006 முதல் 2011 வரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தி.மு.க. ஆனால், தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. எடுத்ததா? இல்லையே!

மாறாக, மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை மின் குறை மாநிலமாக ஆக்கியது தி.மு.க. மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காமல், பணம் பார்க்க வேண்டும்; கமிஷன் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, குறுகிய கால அடிப்படையில் அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை வாங்குவதிலேயே குறியாக இருந்தது தி.மு.க.

இதன் காரணமாக, மின்சார வாரியத்திற்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் ஏற்பட்டதோடு, ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் அளவுக்கு தமிழ்நாடு இருளில் தள்ளப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாது என்று பாரத ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடும் வகையில், மின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மின் துறையில் தி.மு.க. செய்த சாதனை இது தான்.

மின் பற்றாக்குறையைப் போக்குதற்கு அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 3,195 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். அப்போது, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் 14,745 மெகாவாட் ஆக இருக்கும். அதே சமயத்தில், மின் தேவை என்பது 14,505 மெகாவாட் என்ற அளவுக்கு தான் இருக்கும். நானே நேரடியாக மின் நிலைமை குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதன் காரணமாகத்தான் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த அளவு மின்சாரத்தை நம்மால் பெற முடிகிறது.

மின்சாரப் பிரச்சினையில் மக்களுக்கு துன்பங்களை விளைவித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதிக்கு சவால்!

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் பல துரோகங்களை செய்து இருக்கிறார் கருணாநிதி. கர்நாடகம் அணைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தது, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டப்பட்ட உடன், காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். கருணாநிதியின் துரோகங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். என் கட்சியின் சார்பில் நான் தான் பேசுவேன். இதே போல் கருணாநிதியும் வந்து சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாரா?

தி.மு.க-வின் சார்பில் துரைமுருகனோ அல்லது வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனைத் கருணாநிதி ஏற்றுக்கொள்ளத் தயாரா? சட்டமன்றத்திற்கு வரத் தயாரா? என்னை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கத் தயாரா? இதனை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா? என்பது குறித்த அவருடைய முடிவை அவர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மை தான் என்று கருணாநிதியே ஒப்புக்கொள்கிறார் என்று தான் அர்த்தம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜகவின் 'பி' டீம் அல்ல!

அதிமுகவை பாஜகவின் 'பி' டீம் என்றும், பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் யாருக்கும் 'பி' டீம் இல்லை என்பதையும், எங்கள் அணி தான் முதன்மையான அணி என்பதையும் நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி மத்தியிலே அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம் ஆகும். இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றே தீரவேண்டும். எனவே தான், இந்தத் தேர்தலில் அதிமுக 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்த 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான தேர்தல் பிரச்சார கூட்டங்களில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசையும், அந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலே ஒன்பது ஆண்டு காலம் அங்கம் வகித்து தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு உறுதுணையாக இருந்த தி.மு.க-வையும் தான் எங்களால் கடுமையாக விமர்சிக்க முடியும். ஏனெனில், இந்தத் தேர்தலே காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற தேர்தல்.

தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், தமிழக மக்களை வஞ்சித்த கட்சி தி.மு.க. எனவே, தி.மு.க-வின் பொய் முகமூடியை கிழித்தெறிய வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் விமர்சித்து வருகிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மகத்தான வெற்றி பெறும் போது என்னென்ன செயல் திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதைத் தான் நான் விளக்கமாக எடுத்துரைத்து வருகிறேன். தி.மு.க. மற்றும் இதரக் கட்சிகள் தாங்கள் என்ன செய்துள்ளோம், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை எடுத்துச் சொல்வதில்லை. அவர்கள் சொல்வது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று, ஜெயலலிதா பாரதப் பிரதமர் ஆகிவிடக் கூடாது. மற்றொன்று, தாங்கள் சுட்டிக் காட்டுபவர் தான் பாரதப் பிரதமர் ஆக வேண்டும்.

பாஜகவை பொறுத்த வரை அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்தோ, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்தோ, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தோ, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, கச்சத்தீவு பிரச்சினை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் பாஜகவுக்கு அக்கறை இல்லை என்று தான் நாம் பொருள் கொள்ள வேண்டும்" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x