Published : 19 Apr 2014 04:51 PM
Last Updated : 19 Apr 2014 04:51 PM

நான் திமுகவில் இணையவில்லை; கலைஞரும் என்னை அணைக்கவில்லை: டி.ராஜேந்தர்

"நான் திமுகவில் இணைந்த மாதிரி இருக்கும் ஆனால் இணையவில்லை, கலைஞர் என்னை அணைத்த மாதிரி இருக்கும் ஆனால் அணைக்கவில்லை" என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியை தான் மீண்டும் சந்தித்ததன் பின்னணி குறித்து டி.ராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: "திமுக என்னை வெளியேற்றிய பிறகு மீண்டும் கலைஞரை சந்தித்தேன் என்றால், அது நானாக சென்றதல்ல. ஆற்காடு வீராசாமி என் வீட்டிற்கே வந்து வற்புறுத்தி அழைத்துச் சென்றார். சூழ்நிலை கைதியாகத்தான் திமுக தலைவரை நான் சந்தித்தேன்.

சந்திப்பின்போது, கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும், திமுகவில் இணைந்துவிடு என்றார். ஏற்கெனவே இப்படிதான் திரும்பி வந்த என்னை தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைக்க சொல்லி தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார். அதனால், இந்த முறை நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுத்துவிட்டேன்.

நான் லட்சிய திமுகவை ஒரு போதும் கலைத்துவிடவில்லை. நான் திமுகவில் சும்மா கைகட்டி இருக்க விரும்பவில்லை, அப்படி இருக்க நான் ஏன் அங்கு போக வேண்டும்.

கட்சிக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் கலைஞரிடம் இல்லை. கலைஞரே முடிவு எடுத்துவிட்டபிறகு நான் திமுகவில் சேர்வதை தடுத்த சக்தி எது?

திரைப்படத்திற்கு கூட இரண்டு பாகம் உண்டு. என்னை பொறுத்தவரையில் முடிந்திருப்பது முதல் பாகம் இனிமேல் தான் இருக்கிறது இரண்டாம் பாகம்.

இந்த தேர்தல் காலம் ஒரு இடைவேளை. எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு லட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை.

தேர்தலில் களம் இறங்காமல் இருந்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் எந்த நிலையிலும் தரம் இறங்கி போகமாட்டேன்". இவ்வாறு டி. ராஜேந்தர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x