Published : 14 Apr 2014 08:42 PM
Last Updated : 14 Apr 2014 08:42 PM

தஞ்சை பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இன்று 14.04.2014 காலை 11.00 மணியளவில், தஞ்சாவூர் நாடாளுமன்ற வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷம சக்திகள் தாக்குதல் நடத்தி, தடுக்க முற்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல் வீரர்கள் மீதும் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தி 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும், வேட்பாளரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டிணத்தில் விஷமசக்திகளால் நடத்தபட்ட வன்முறை தாக்குதல், பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலை வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்க தமிழ்நாடு பா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது.

மல்லிபட்டிணத்தில் பா.ஜ.க. தேர்தலில் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தும் காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால் இந்த வன்முறை நடத்திட விஷமசக்திகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளது, என்று கருதுகின்றோம்.

இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும், இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது ஜனநாயக உரிமை ஆகும். இதை யாரும் தடுக்க முடியாது. இனி இதுபோன்ற ஜனநாயக விரோத வன்முறை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x