Published : 16 Apr 2019 12:08 pm

Updated : 16 Apr 2019 12:41 pm

 

Published : 16 Apr 2019 12:08 PM
Last Updated : 16 Apr 2019 12:41 PM

சிறுபான்மையினரை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில், அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட அதிமுக வேட்பாளர் மணல் அனுப்புகிறார் என ஈவிகேஎஸ். இளங்கோவன் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். அவர் மீது வழக்குத் தொடரப்படும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்யப்பட்டுள்ளது.

தேனியில் அதிமுக அதிக பணம் செல வழிப்பதாகக் கூறி வருகிறார். இதுவும் தவறான தகவல். மக்கள் நலப் பணிகளையும், செய்த, செய்யப் போகிற திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரிக்கலாம். ஆனால், அதுபோன்று கூற எதுவும் இல்லாததால் குறைகூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆட்சியில் இல்லாதபோதே, ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரிக்கை விடுத்தார். ஆனால் காங்கிரஸும், திமுகவும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு, அதிமுகதான் இதற்கான முயற்சியைச் செய்து வெற்றி கண்டது.மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகாவில் ராகுல் தேர்தல் வாக்குறுதி அளிக்கிறார். ஆனால், இங்குள்ள காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என்று மறுக்கிறார்.

தகுதியுள்ள, திறமை வாய்ந்த வாரிசுகள் அரசியலுக்கு வரலாம். மக்கள் செல்வாக்கு இருப்பதுதான் முக்கியம். சேது சமுத்திரத் திட்டம் இயற்கைக்கு உகந்ததாக இல்லை. எனவே தோல்வியில் முடியும் என்று ஜெயலலிதா கூறினார். இருப்பினும், ரூ. 40 ஆயிரம் கோடி ரூபாயை கடலில் கொட்டியது போல ஆகிவிட்டது. வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுப்பது போன்ற வீடியோ உண்மை அல்ல. அமமுக வேட்பாளர் கதிர்காமு குறித்த வீடியோவை நாங்கள்தான் பரப்புவதாகக் கூறுகின்றனர். அது போன்ற கீழ்த்தரமான செயலை நாங்கள் செய்ய மாட்டோம்.

இத்தொகுதியில் பல பகுதிகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் உள்ளது. ஆனால், இளங்கோவன் குடிநீர்த் தட்டுப்பாடு என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

முந்தைய தேர்தல்களில் வெளியான பல கணிப்புகள் பொய்யாகி உள்ளன. அமமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுகவைக் கைப்பற்றும் என்பது போன்ற யூக கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னவர் கருணாநிதி. ஆனால், அதை மறந்து திமுக மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. அவர்கள்தான், எங்களைப் பார்த்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து விமர்சிக்கின்றனர்.

அதிமுக ஆட்சி குறித்து வதந்தி பரப்பி வரும் முக. ஸ்டாலின் மீது வழக்குத் தொடருவோம். அதிமுக ஆட்சியில் மதக் கலவரம் ஏற்பட்டதில்லை. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதல் நிலையில் உள்ளது. இஸ்லாமிய நாடுகளில் கூட நோன்புக் கஞ்சிக்கு இலவசமாக பொருட்கள் வழங்குவதில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் 4,500 டன் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

இஸ்லாமியர், கிறிஸ்தவர் புனிதப் பயணங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டெர்லைட் சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்தப்படும். எட்டு வழிச்சாலை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்ற முதல்வரின் கருத்தே அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

அருகில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பார்த்திபன் எம்.பி. உட்பட பலர் இருந்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தமிழக சிறுபான்மைசிறுபான்மையினர் பாதுகாப்புநாடாளுமன்ற தேர்தல்ஓபிஎஸ் பிரச்சாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author