

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யும் எல்லா நேரங்களிலும் வேட்பாளர்களின் முகவர்களும் உடன் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் எல்.எஸ்.எம்.ஹசன் ஃபசல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது: வாக்குப்பதிவுக்கு முன்பாக வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிக்க தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுத்துள்ளது. வாக்குச்சாவடி அதிகாரிகள் பூத் சிலிப் விநியோகம் செய்யும் போது வேட்பாளர்களின் முகவர்கள் உடன் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பூத் சிலிப் விநியோகம் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக வேட்பாளர்களின் முகவரிடம் கையொப்பம் பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு, வாக்காளர் பதிவு அதிகாரி அலு வலகத்திலோ அல்லது வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு அருகிலோ பூத் சிலிப் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருக்க வேண்டும் என்பது பற்றி தேர்தல் ஆணையம் எதுவும் கூறவில்லை.
எனவே, பூத் சிலிப் விநியோகிக்கும் எல்லாக் கட்டங்களிலும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உடனிருக்க வேண்டும். அப்போதுதான் போலி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்வதைத்தடுக்க முடியும். உண்மையான வாக்காளர்கள் பூத் சிலிப் பெற்று, வாக்களிப்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே வீடுகளுக்கு நேரில் சென்று விநியோகம் செய்யும்போது மட்டுமின்றி, வாக்குப்பதிவு அலுவலகத்திலும், தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி அருகிலும் பூத் சிலிப் விநியோகம் செய்யும்போதும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உடன் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்தனர்.