கருப்புக்கொடி ஏற்றி தம்பிதுரைக்கு எதிர்ப்பு

கருப்புக்கொடி ஏற்றி தம்பிதுரைக்கு எதிர்ப்பு
Updated on
1 min read

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிக்கச் சென்றபோது மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்கள் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்ததுடன், கட்சி பிரமுகர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி செவலூரில் உள்ள திருவிக நகர் பகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக போதிய அளவு குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை.குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

பின்னர் என்ன காரணத்தினாலோ இந்த ஆழ்குழாய்க் கிணறு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. சாக்கடை வாய்க்காலும் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் இப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட நாடகமேடை, பொதுசுகாதார வளாகம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை வாக்கு சேகரிக்க வந்த கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் பகுதி நுழைவாயிலில் கருப்புக்கொடி ஏற்றிவைத்திருந்தனர்.

இதனால் வேட்பாளர் தம்பிதுரை அந்த பகுதிக்கு பிரச்சாரம் செய்ய செல்வதைத் தவிர்த்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னச்சாமி, அதிமுக நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைவில் அப்பகுதியில் அனைத்து வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என சமாதானம் பேசினர். ஆனாலும், அப்பகுதி மக்கள் சமாதானமடையவில்லை. இறுதிவரை அப்பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க செல்லவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதி மக்கள் தங்களது ஏரியாவுக்கு வாக்கு சேகரிக்க வந்த திமுகவினருக்கும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in