

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் முதல்வர் ஜெயலலிதா 3 நாட்கள் வீதிவீதியாக வேனில் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து தீவிர பிரச் சாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 3-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய ஜெய லலிதா, தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், வரும் 19-ம் தேதி முதல் சென்னையின் 3 தொகுதிகளிலும் வேனில் வீதிவீதியாகச் சென்று ஆதரவு திரட்டுகிறார். இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 17-ம் தேதி (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதி களில் பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து 19-ம் தேதி (சனிக்கிழமை) முதல் சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் ஆலந்தூர் சட்ட மன்றத் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். 19-ம் தேதி மாலை போயஸ் கார்டனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, ஆலந்தூர் சட்ட சபைத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து தில்லை கங்கா நகர், ஆலந்தூர் நீதிமன்றம், ஆகிய இடங்களில் பேசுகிறார். பின்னர் மத்திய சென்னை தொகுதியில் எம்எம்டிஏ காலனி மெயின் ரோடு வழியாக சென்று ரசாக் கார்டன் சந்திப்பிலும் அயனாவரம் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சூளை வழியாக வந்து சூளை தபால் நிலையம் அருகிலும் பின்னர், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலும் உரையாற்றுகிறார்.
ஏப்ரல் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உரையாற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து 21-ம் தேதி தென் சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடி, சைதாப்பேட்டை ஐந்து விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், தி.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.