Published : 16 Apr 2014 09:54 PM
Last Updated : 16 Apr 2014 09:54 PM

திமுக, அதிமுகவுக்கு மாற்றான பாஜக கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்: மோடி

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு சிறந்த மாற்றாக உருவாகியுள்ள பாஜக தலைமையிலான கூட்டணி எதிர்காலத்தில் தொடரும் என்று கிருஷ்ணகிரியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி கூறினார்.

சிறந்த மாற்று அணியாக, பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகியுள்ளது என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அன்புமணி (தருமபுரி), ஜி.கே.மணி (கிருஷ்ணகிரி), ஏ.கே.மூர்த்தி (ஆரணி) உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசியது:

"தமிழ்நாட்டில் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் திமுக அல்லது அதிமுக, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

இந்த நிலையில்தான், மக்களுக்கு சேவை செய்யவும், அவர்கள் தேவைகளை பூர்த்திசெய்யவும், இம்மாநிலத்தில் மாற்று அணி உருவாகியுள்ளது. இது ஒரு சிறந்த மாற்று அணி. எதிர்காலத்திலும் இந்தக் கூட்டணி தொடரும். எனவே, இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் வலிமையான ஆட்சி அமைய தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் அத்தியாவசியமான ஒன்று. இந்த மாநிலத்தில் அது கிடைக்கிறதா? நாட்டில் நிலக்கரி பற்றாக்குறைக்கு காங்கிரஸின் நிலக்கரிச் சுரங்க முறைகேடுதான் காரணம். 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையங்கள் வீணாக இருக்கின்றன.

நிலக்கரியை வீட்டில் சேமித்து வைக்க மாட்டார்கள். வெளியில்தான் சேமித்து வைப்பார்கள். அதை பிச்சைக்காரர்கள்கூட எடுக்க மாட்டார்கள். திருடர்கள் திருட மாட்டார்கள். ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அதைக் கூட விட்டு வைக்கவில்லை. காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், நிலக்கரியையும் வங்கி லாக்கர்களில் சேமித்து வைக்க வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாவார்கள்.

எனது முன்னேற்ற திட்டத்தினால் குஜாராத்தின் தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை பல்வேறு வழிகளில் தீர்க்கப்பட்டுள்ளது. நர்மதா நதியிலிருந்து 9,000 கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் நீர்க்குழாய் மிகப்பெரியது. அதில், மறு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) உள்பட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு காரில் பயணம் செய்யலாம்," என்றார் மோடி.

சேலத்தில் பேச்சு:

சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுதீஸ் உள்பட 14 வேட்பாளர்களை ஆதரித்து, சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேசும்போது, "மாநிலங்களுக்கு இடையே நதிநீர், மின்சாரம், மொழி ரீதியாக சண்டையை மூட்டி, காங்கிரஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளாக மாநிலங்களுக்கு இடையேயான சண்டையை தீர்த்து வைக்கவில்லை. நதிநீர் பிரச்சினைகளுக்கு நாங்கள் உரிய தீர்வு காண்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் வீடு, அவர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளி, தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதிகள் கிடைக்கும். கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை, பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 60 மாதங்களில் செய்துகாட்டும்" என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x