Published : 10 Apr 2014 10:33 AM
Last Updated : 10 Apr 2014 10:33 AM

தேர்தல் காலத்தில் கள்ள நோட்டு, கறுப்புப் பணம்: வருவாய் புலனாய்வுத்துறை எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலையொட்டி கள்ள நோட்டு மற்றும் அதிக அளவு கறுப்புப் பணம் புழக்கத்தில் விடப்படலாம் என்பதால், சர்வதேச விமான நிலையங்கள், நாட்டின் எல்லைப் பகுதிகள், துறைமுகங்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு உஷார் படுத்தியுள்ளது.

வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகம் இது தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பயணிகளைக் கவனமாகச் சோதனையிட வேண்டும் என வருவாய் புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

கள்ளநோட்டுகள் வெளிநாடுகளிலிருந்து புழக்கத்தில் விடப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாபிலுள்ள அட்டாரி-வாகா எல்லை, ராஜஸ்தான் ஜோத் பூரிலுள்ள முனாபாவோ ரயில் நிலையம் உள்ளிட்ட இந்திய-சர்வதேச எல்லைகளில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.துறைமுகங்களும் உஷார் படுத்தப் பட்டுள்ளன. வளைகுடா நாடுகளிலிருந்து அடிக்கடி இந்தியா வரும் பயணிகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, பிலிப்பின்ஸ், கம்போடியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றனர். பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் கடத்தப்படுவது வேகமாக அதிகரித்து வருவதையும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வகையில் கொண்டு வரப்பட்ட ரூ. 15 லட்சம் கள்ள நோட்டுகளை கடந்த ஏப்ரல் 2013 முதல் கடந்த ஜனவரி மாதம் வரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x