Published : 18 Apr 2014 11:43 AM
Last Updated : 18 Apr 2014 11:43 AM
இந்தியா ஒரே இந்துஸ்தானாக இருக்கவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். பாஜகவோ அதை இரண்டு பகுதிகளாக துண்டாக்க முற்படு கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மத்தியப்பிரதேசம் கந்துவா ஸ்டேடியத்திலும் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மக்களவைத் தொகுதியிலும் வியாழக்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவை இருபகுதிகளாக துண்டாக்க பாஜக முயற்சிக்கிறது. மாறாக, இந்தியா ஒரே ஹிந்துஸ்தானாக இருக்கவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம்.
ஊழலை பற்றி பேசும் பாஜகவில்தான் ஊழல் புரையோடி உள்ளது. அந்த கட்சியில் உள்ள ஊழல் தலைவர்கள்தான் முதல்வரிசையில் வந்து அமர்கிறார்கள். கர்நாடகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் நிலைமை அனை வருக்கும்தெரிந்ததுதான்.
குஜராத் வளர்ச்சித் திட்டத்தை ஏதோ புதிய கண்டுபிடிப்புபோல பாஜகவினர் பேசுகிறார்கள். குஜராத் முன்னேற்றத் திட்டம் எப்படியோ அது போன்றதுதான் சத்தீஸ்கரின் வளர்ச்சித் திட்டமும். நம்ப முடியாத கட்டுக்கதை இந்த திட்டங்கள்.
சத்தீஸ்கரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு விவசாயிகளின் விளை நிலங்களை தொழிலதிபர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கிறது. மாநில முதல்வர் ரமண் சிங்கின் ஆட்சியில் ஊழல் புரையோடியுள்ளது. அலுமினியத் தொழிற்சாலை (பால்கோ) மிக மலிவான விலைக்கு தொழிலதிபர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ. 1 என்ற விலையில் குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி விற்றுள்ளார். தம் கைக்கு நிலங்கள் வந்ததுமே அவற்றைர் சதுர மீட்டர் 800 ரூபாய் என்ற விலையில் தொழிலதிபர் விற்றிருக்கிறார். இந்த காலத்தில் ஒரு ரூபாய் விலையில் குச்சி மிட்டாய்தான் வாங்க முடியும்.வேறு எதையும் வாங்க முடியாது
சதுர மீட்டர் ரூ. 1 என்ற விலையில் ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்துள்ளார் மோடி.
சத்தீஸ்கரில் நிலைமை சற்று வேறு. குஜராத் போன்று மோசம் இல்லை. சத்தீஸ்கரில் சற்று அதிகமான விலைக்கு விவசாயிகளின் நிலம் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் அமர்த்துவதுதான் பாஜகவின் லட்சியம். ஆனால் 2004லும் 2009லும் ஏற்பட்ட கதிதான் ஏற்படப் போகிறது.
உணவுக்கு உத்தரவாதம், வேலைக்கு உத்தரவாதம் போன்று இனிமேல் சுகாதாரத்தை பேணும் உரிமை, வீடு, பென்ஷன் போன்றவற்றையும் மக்களின் உரிமையாக்கிட காங்கிரஸ் சட்டம் கொண்டுவரும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க தனியாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றார் ராகுல் காந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT