Published : 18 Apr 2014 09:02 AM
Last Updated : 18 Apr 2014 09:02 AM

5-ம் கட்டத் தேர்தல்: 121 தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு, கர்நாடகம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கர்நாடகம் - 28, ராஜஸ்தான் - 20, மகாராஷ்டிரம் - 19, உத்தரப் பிரதேசம் - 11, ஒடிசா - 11, மத்தியப் பிரதேசம் - 10, பிஹார் 7, ஜார்க்கண்ட் - 6, மேற்கு வங்கம் - 4, சத்தீஸ்கர் - 3, ஜம்மு காஷ்மீர் - 1, மணிப்பூர் - 1 என மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

9 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், 5-வது கட்டத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் (121) வாக்குப் பதிவு நடைபெற்றது. ஏற்கெனவே, கடந்த 4 கட்டங்களில் 111 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு

ஜார்க்கண்டில் 6 தொகுதிகளில் 62 சதவீத வாக்குகள் பதிவானது.

பொகாரோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் தண்டவாளத்தை மாவோயிஸ்ட்கள் தகர்த்தனர். 10 வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர்.

மேற்கு வங்கம் 78.89%

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் 78.89 சதவீத வாக்குகள் பதிவானது. பெரும்பாலும் அசம்பாவிதமின்றி அமைதியாக தேர்தல் நடைபெற்றது.

சத்தீஸ்கர் 63.44%

சத்தீஸ்கரில் காங்கெர், ராஜ்நந்தகான், மகாசமுந்த் ஆகிய தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 63.44 சதவீத வாக்குகள் பதிவானது. காங்கெர் தொகுதியில் தேர்தலை சீர்குலைக்க கண்ணிவெடித் தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

உத்தரப் பிரதேசம் 62.52%

உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளில் 62.52 சதவீத வாக்குகள் பதிவானது. மேனகா காந்தி, சந்தோஷ் கங்வார், சலீம் செர்வானி, பேகம் நூர் பானோ உள்ளிட்ட 150 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசம் 54.41%

மத்தியப் பிரதேசத்தில் 10 மக்களவைத் தொகுதிகளில் 54.41 சதவீத வாக்குகள் பதிவாகின.

ராஜஸ்தான் 63.25%

ராஜஸ்தானில் 20 தொகுதி களில் 63.25 சதவீதம் பேர் வாக்களித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடும் பார்மர் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரம் 54.67%

மகாராஷ்டிரத்தில் 19 தொகுதிகளில் மொத்தம் 54.67 சதவீத வாக்குகள் பதிவாகின. எந்தவிதமான அசம்பாவிதமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

கர்நாடகம் 68%

கர்நாடகத்தில் ஒரே கட்டமாக 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்துப் பகுதிகளிலும் சுமுகமாக தேர்தல் நடைபெற்றது.

தும்குர், பெல்காம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பணியிலிருந்த இரு அலுவலர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

தவிர, ஒடிசாவில் 70% பிஹாரில் 56% , ஜம்மு காஷ்மீரில் 69%, மணிப்பூரில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x