

வாரணாசி தொகுதியில் தனக்கும் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும் போட்டியிடுகின்றனர்.
மோடிக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால், இத்தொகுதி நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று வாரணாசி தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்கு அருகில் செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால்: " தேர்தலில் மக்கள் பெருமளவில் வந்து வாக்களிக்க வேண்டும். வாரணாசி தொகுதியில் எனக்கும் மோடிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை ஒரு போட்டியாகவே கருதவில்லை" என்றார்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு அரசியல் கட்சியின் வேட்பாளர் தவிர பிறர் தொகுதிக்குள் இருக்க தடை இருக்கும் போது மனிஷ் சிசோதியா இன்னும் தொகுதிக்குள் இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்ப்பட்டது. ஆனால் வாக்குச்சாவடிக்கு அருகில் இருந்து பேசுவது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகும் எனக் கூறி கேஜ்ரிவால் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
வாரணாசி போட்டியில் அஜய் ராய்க்கு பங்கு இல்லை என கேஜ்ரிவால் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்: "களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் நான் மட்டும் இம்மண்ணின் மைந்தன். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரியும் மக்கள் தங்களுக்கு பணிபுரிய ஒரு உள்ளூர் வாசியையே தேர்வு செய்வார்கள்" என்றார்.