

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான நல்ல வாய்ப்பு இருப்பதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைவதை தடுத்து நிறுத் திட புதிதாக சில கட்சிகளை இடம்பெறச் செய்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விரிவுபடுத்த வேண்டும் என்ற யோசனை வலுப்பெற்றுவரும் நிலையில் சிதம்பரத்தின் இந்த கருத்து அமைந்துள்ளது.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுமார் 190 தொகுதிகளை பெற்றபோதிலும் எதிர்க் கட்சிகள் வரிசையில் அமர்வதென அப்போது ராஜீவ் காந்தி முடிவு எடுத்தார். அப்போதைய நிலைமை வேறு. இப்போதைய அரசியல் நிலைமை வேறு.
கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தமது தலைமையில் அரசு அமைப்பதற்கான நல்ல வாய்ப்பு காங்கிரஸுக்கு இருக்கிறது.
நிலையான ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எந்த கட்சிக்கு இருந்தாலும் அதற்கு அது முன் வரவேண்டும். தமது பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும். பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு ஓடக்கூடாது. புதிய அரசு அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் அதை தட்டிக்கழிக்காது. 2014ல் அரசியல் நிலைமை மாறி உள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. பல்வேறு மாநிலங்களின் தேர்தலாகும். பல்வேறு கட்சிகளுக்கும் இறுதியாக எத்தனை தொகுதிகள் கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
முடிவு எப்படி அமையும் என்பதை நான் கணிக்க விரும்பவில்லை. எல்லா கட்சிகளுமே வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில்தான் போட்டியிடு கின்றன என்றார்