

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவை அடுத்து அதிக பெரும்பான்மை பெற்ற கட்சியாக சிவ சேனை திகழ்ந்தாலும், அமைச்சரவையில் இடம்பெற சிவ சேனை உரிமை கோராது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
இது குறித்து சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவை அடுத்து அதிக பெரும்பான்மை பெற்ற கட்சியாக சிவ சேனை திகழ்ந்தாலும், அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்த முடிவுகளை நரேந்திர மோடி மட்டுமே எடுப்பார்.
1998-ல் முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபோது, வாஜ்பாயி எனது தந்தை பால் தாக்கரேவை அமைச்சரவையை தேர்வு செய்யும்படி வலியுறுத்தினார். ஆனால் அதனை எனது தந்தை மறுத்தார், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சிவ சேனை கொண்டிருப்பது இந்துத்துவ அடிப்படையிலான கூட்டணி மட்டும் தான். அமைச்சரவைக்கான கூட்டணி இல்லை என்று கூறினார். அதனையே தற்போதைய சிவ சேனையும் பின்பற்றுகிறது” என்றார்.
இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற ஆட்சியமைப்பு குழு கூட்டத்தில், உத்தவ் தாக்கரேயும் கலந்துக் கொள்கிறார். ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்ட தலைவரான நரேந்திர மோடி, இந்த கூட்டத்தில் அமைச்சரவையில் இடம்பெற போகும் நபர்கள் குறித்த முடிவுகளை, கூட்டணி கட்சியினரோடு கலந்து ஆலோசித்து அறிவிப்பார் என பாஜக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.