

பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சீக்கிய மதப் பாடலை அவமதிக்கும் வகையில் பாடியதால் மாநில வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியாவுக்கு குருத்வாராவில் சேவை செய்ய தண்டனை அளிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அனந்பூரில் உள்ள கேஸ்கர் சாஹிப் குருத் வாராவில் காலணிகளை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்ற பணிகளைச் செய்ததுடன், மதபோதனைகளையும் அவர் கேட்டார். பஞ்சாப் மாநிலம் அமிரு தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். கடந்த 1-ம் தேதி அவருக்கு ஆதரவாக மஜிதியா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது சீக்கிய மதப் பாடலில் குரு கோவிந்த் சிங்கின் பெயர் வரும் இடத்தில் அருண் ஜேட்லியின் பெயரை பயன்படுத்தி பாடினார்.
இது சீக்கிய மதப்பற்றாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த செயல் தொடர்பாக சீக்கிய மத உயர் அமைப்பான அகால் தத்தில் உள்ள மத குருக்கள் விசாரணை மேற்கொண்டு, 5 நகரங்களில் உள்ள குருத்வாராக்களுக்கு சென்று சேவையாற்ற வேண்டுமென மஜிதியாவுக்கு தண்டனை வழங்கினர். இதனை மஜிதியா ஏற்றுக் கொண்டார்.
அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மஜிதியா, பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்வீர் சிங் பாதலின் மைத்துனர் ஆவார்.