Published : 17 May 2014 10:26 AM
Last Updated : 17 May 2014 10:26 AM

டெல்லியை கைப்பற்றியது பாஜக: காங்கிரஸிற்கு மூன்றாவது இடம்

டெல்லியின் ஏழு தொகுதிகளை யும் பாஜக கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் மூன்றாவது இடத்தை காங்கிஸ் கட்சியும் பெற்றன.

டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இங்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தொகுதியான சாந்தினி சௌக்கில் பாஜகவின் டாக்டர்.ஹர்ஷவர்தன் சுமார் 1,35,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளரான அசுதோஷ் இரண்டாவது இடத்தை பெற்றார். தொடர்ந்து மூன்றுமுறை எம்பியாக இருந்த காங்கிரஸின் மத்திய அமைச்சரான கபில்சிபலுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது.

ரிசர்வ் தொகுதியான வடமேற்கு டெல்லியின் எம்பியான கிருஷ்ணா தீரத் படுதோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உதித்ராஜ், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராக்கி பித்லானை விட 1,06,802 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தலித் சமூகத்தின் தலைவரான உதித்ராஜ், இந்திய நீதிக்கட்சி என்ற பெயரில் நடத்தி வந்த அரசியல் கட்சியை கலைத்து விட்டு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு உதித்ராஜுக்கு 6,29,860 வாக்குகளும், ராக்கிக்கு 5,23,058 வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணாவிற்கு 1,57,468 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இங்கு போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரான வசந்த் பன்வாருக்கு 21,485 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில், ராக்கி கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மங்கோல்புரி தொகுதியில் வெற்றி பெற்றவர்.

தெற்கு டெல்லியில், பாஜகவின் ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி கட்சியின் தேவேந்தர் ஷெஹ்ராவத்தை விட 1,07,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லி துக்ளக்காபாத்திம் எம்.எல்.ஏவான பிதூரிக்கு 4,97,980 வாக்குகளும் ஷெஹ்ராவத்திற்கு 3,90,980 வாக்குகளும் கிடைத்துள்ளன. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் எம்எல்ஏவான ரமேஷ்குமாருக்கு 1,25,213 வாக்குகள் கிடைத்துள்ளன. இவர், சீக்கியர்கள் கலவர வழக்கில் சிக்கிய காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமாரின் சகோதரர் ஆவார். இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட ரூபி யாதவிற்கு 56,749 வாக்குகள் கிடைத்துள்ளன.

கிழக்கு டெல்லியில் பாஜகவின் மஹேஷ்கிரி, ஆம் ஆத்மியின் வேட்பாளரும், மகாத்மா காந்தியின் பேரனுமான ராஜ்மோகன் காந்தியை 1,90,463 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கிரிக்கு 5,72,202 மற்றும் காந்திக்கு 3,81,739 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸின் எம்பியும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமான சந்தீப் தீட்சித் 2,03,240 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

மேற்கு டெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஜ்சாஹிப்சிங் வர்மா, ஆம் ஆத்மியின் ஜர்னல்சிங்கை 2,68,586 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வடகிழக்கு டெல்லியில் பாஜகவிற்காக போட்டியிட்ட போஜ்புரி மொழி நடிகரான மனோஜ் திவாரி, ஆம் ஆத்மியின் பேராசிரியர் அனந்த்குமாரை 1,44,688 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புதுடெல்லியில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான மீனாட்சி லேக்கி 1,61,894 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மியின் ஆஷிஷ்கே தானை தோற்கடித்துள்ளார்.

இங்கு காங்கிரஸின் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x