

நரேந்திர மோடி தலைமையில் அமைய உள்ள அரசு இந்தியாவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என அவரது நெருங்கிய நண்பரும், பாஜகவின் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் வரும் நாட்களில் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் சாதகமான மாற்றம் ஏற்படும். மோடி தலைமையில் அமைய உள்ள அரசு நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்களும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (சோனியா காந்தி, ராகுல் காந்தி). இதுபோல, ஆளும் கட்சியான சமாஜ்வாதி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இவர்களும் கட்சித் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சற்று வருத்தமாக உள்ளது.
ஆட்சியில் இருந்த தேசியக் கட்சியான காங்கிரஸ், எந்த ஒரு மாநிலத்திலும் இரண்டு இலக்கத்தைத் தொடவில்லை. இதுதவிர, 7 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாஜகவின் பக்கம் காற்று பலமாக வீச ஆரம்பித்தது. இறுதியில் இது சுனாமியாக மாறிவிட்டது என்றார்.