

மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு பிஜு ஜனதா தளம் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரவாத் திரிபாதி கூறியுள்ளார்.
ஆனால், அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இதை மறுத்துள்ளார்.
ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கு குறிப்பிடத் தகுந்த வெற்றி கிடைக்கும் என அக்கட்சியினர் கூறி வரு கின்றனர்.
இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிஜு ஜனதா தள மூத்த தலைவர் பிரபாத் திரிபாதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “நாட்டு மக்களின் கருத்தையும், மாநில நலனையும் கருத்தில் கொண்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை” என்றார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் ஜெய் பாண்டா, “கூட்டணி அமைப்பது தொடர்பான விவகாரங்களை முதலில் கட்சிக்குள் விவாதிக்க வேண்டும். இறுதி முடிவை கட்சியின் தலைவர்தான் எடுப்பார்” என்றார்.
பிஜு ஜனதா தளத் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவுடன் பேச்சுவார்ததை எதையும் நாங்கள் நடத்தவில்லை. அதைப் பற்றி நாங்கள் நினைக்கவும் இல்லை. தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.
பாஜக, காங்கிரஸிடமிருந்து விலகி நிற்பது என்ற பிஜு ஜனதா தளக் கொள்கையில் மாற்றம் இல்லை. மத்தியில் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நாங்கள் விவாதம் ஏதும் நடத்தவில்லை” என்றார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிஜு ஜனதா தளம், 2009-ம் ஆண்டு அக்கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாஜகவின் ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. எனவே, மத்தியில் பாஜகவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இக்கருத்தை ஏற்க மறுத்த கட்சியின் மூத்த தலைவர் பினாகி மிஸ்ரா, “பிஜு ஜனதா தளம் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒடிசா மாநில அரசிடம் பாரபட்சமாக நடந்து கொள்ள முடியாது” என்றார்.