

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாலும், நரேந்திர மோடிதான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பதை முழுதும் ஒப்புக்கொள்ளாத தொனியில் பேசியுள்ளார்.
பாஜகவின் இந்த எதிர்பாராத வெற்றிக்கு நரேந்திர மோடியின் பங்களிப்பு என்னவென்பதை இனிமேல்தான் மதிப்பிடவேண்டும் என்கிற தொனியில் அத்வானி பேசியுள்ளார்.
வெற்றிக் களிப்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த அத்வானி வரலாற்றில் இந்திய இதுபோன்ற தேர்தலைச் சந்தித்ததில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் காங்கிரஸின் முடியாட்சிப் போக்குகளுக்கு எதிரான மக்களின் கோபமே பாஜகவின் இத்தகைய வெற்றியைத் தீர்மானித்துள்ளது என்று கூறினார் அத்வானி.
"கடந்த தேர்தல்களில் வெற்றி பெறாத தொகுதிகளிலெல்லம் இப்போது வெற்றி பெற்றுள்ளோம். அரசியலில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து இந்த தேர்தல் முடிவுகள் கற்றுக்கொடுத்துள்ள பாடங்களைச் சிந்திக்கவேண்டும், இந்த வெற்றியில் மோடியின் தலைமை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக உள்ளிட்ட பிற அமைப்புகளின் பங்களிப்புகளை ஆய்வு செய்யவேண்டும். ஆனால் முடிவு ஊழல், முடியாட்சி மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிரானதாகவே நான் கருதுகிறேன்" என்றார் அத்வானி.