Published : 02 May 2014 08:50 AM
Last Updated : 02 May 2014 08:50 AM

நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரம்: பூரி, துவாரகை சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு

நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாக பூரி சங்கராச்சாரியார் சுவாமி அதோக்ஷ்ஜானந்தா தேவ்திராத் மற்றும் துவாரகை சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. சௌத்ரி முன்னாவர் சலீமின் வீட்டில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி அதோக்ஷ்ஜானந்தா தேவ்தி ராத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரபல குற்றவாளி ஒருவர் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரைப் பற்றிய உண்மைகளைப் பகிரங்கப்படுத்த நான் வாரணாசி செல்கிறேன். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவர் பற்றி பகிரங்கப்படுத்த வேண்டும். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கப்போவதில்லை. ஆனால், மதசார்பற்ற கட்சி வெற்றி பெற வேண்டும்.

அவர் குற்றமிழைத்தவர். நீதியை நேசிக்கும் யாரும் அவரை விரும்பமாட்டார்கள். மோடி குஜராத்தின் முதல்வராகப் பதவி யேற்ற சில மாதங்களிலேயே அம்மாநில மக்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். அந்தப் படு கொலைக்கு மோடிதான் பொறுப்பாளர்.

பாஜக தலைவர்கள் விடும் அறிக்கைகள், நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஆஸம்கான் மீது தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். குஜராத் கலவரத்தையும் முஸாபர்நகர் கலவரத்தையும் ஒப்பிடக் கூடாது. குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் அம்மாநில உயரதி காரிகளுக்கும் பங்கு உள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றதால் குற்றங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தமல்ல. இவ்வாறு பூரி சங்கராச்சாரியார் தெரிவித்தார்.

துவாரகை சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தாவின் உதவியாளர்கள் கூறுகையில், “உடல்நலக்குறைவு காரணமாக ஸ்வரூபானந்தாவால் மோடிக்கு எதிராக நேரடியாகப் பிரச்சாரம் செய்ய முடியாது. அவரின் சார்பில் சுமாவி அவி முக்தேஸ்வரானந்தா பிரச்சாரம் செய்வார்” என்றார்.

ஹர ஹர மோடி என பாஜக தொண்டர்கள் கோஷ மெழுப்பியதற்கு ஸ்வரூபானந்தா ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதையடுத்து தொண்டர்களை அவ்வாறு கோஷமெழுப்ப வேண்டாமென மோடி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x