

மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.இதைத் தொடர்ந்து மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கடந்த திங்கள்கிழமை கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதனிடையே கட்சியின்தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த சனிக்கிழமை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட சங்பரிவார் மூத்த தலைவர்களை மோடி சந்தித்து நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது அவர் பாஜகவின் பல்வேறு மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.