

பிரியங்கா காந்தி மீது பிஹார் மாநில பாஜக தலைவர்கள் இருவர் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
நரேந்திர மோடி தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக பிரியங்கா காந்தி பேசினார். இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பிஹார் மாநில பாஜக பொதுச்செயலாளர் சுராஜ்நந்தன் மேத்தா பாட்னா நீதிமன்றத்தில் பிரியங்கா காந்தி மீது வழக்குத் தொடுத்துள்ளார். அதில் இரு வகுப்பினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பிரியங்கா பேசியுள்ளார்.
அவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவே பிரியங்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
பொது அமைதியைக் கெடுக்க உள்நோக்கத்துடன் பேசுவது, அவதூறாக பேசுவது, தேர்தலை கருத்தில்கொண்டு தவறான செய்திகளை பரப்புவது, இரு பிரிவினரிடையே மோதலை துாண்டும் வகையில் பேசுவது, தேச ஒற்றுமைக்கு எதிராகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இதேபோல தர்பாங்கா மாவட்ட நீதிமன்றத்தில் பிஹார் மாநில பாஜக மீனவர் பிரிவு தலைவர் அர்ஜுன் ஷானியும் பிரியங்கா மீது இதே குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.