

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் இளம்பெண் வேவு பார்க்கப் பட்டதாக கூறப்படும் புகார் பற்றி விசாரிக்க நீதிபதியை நியமிப்பது என்ற முடிவு கைவிடப்பட்டதற்கு ‘பழிவாங்குகிறது என்ற அவப் பெயர் வராமல் தடுக்கவே’ என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்ட அமைச்சரும் காங்கிரஸ் தலை வருமான கபில்சிபல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அரசியல் ரீதியில் பழி தீர்ப்பதாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டப்படலாம். இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாக விரும்பவில்லை. விசாரணை நடத்துவதற்கான நீதிபதியை அறிவிக்காமல் கைவிட்டதில் தவறு ஏதும் இல்லை. புதிய அரசு இதில் முடிவு எடுக்கட்டும் என்றார் கபில் சிபல்.
இளம்பெண் வேவு பார்ப்பு புகார் தொடர்பாக விசாரிக்க மே 16 க்குள் நீதிபதி அறிவிக்கப்படுவார் என்று அமைச்சர்கள் கபில் சிபலும் சுஷில் குமார் ஷிண்டேவும் கடந்த வாரம் அறிவித்ததை தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.
இந்த புகார் பற்றி நீதிபதியை கொண்டு விசாரிக்கலாம் என மத்திய அமைச்சரவை டிசம்பரில் முடிவு எடுத்தபோதிலும் நீதிபதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது எதற்காக என ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை கடுமையாக பாஜக விமர்சித்தது.
பெண் வேவு பார்ப்பு புகார் தொடர்பாக மாநில அரசே (குஜராத்) விசாரணைக் குழுவை நியமித்துள்ள நிலை யில் மத்திய அரசு தரப்பில் விசாரிக்க என்ன அவசியம் என்றும் பாஜக வினவியது. எதிர்பாராத திருப்பமாக, அதிர்ச்சி தரும்வகையில் ஆளும் கூட்டணி யைச் சேர்ந்த தேசியவாத காங்கி ரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் மத்திய அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்தன.