மக்களவை தேர்தலுக்கு அரசு செலவு ரூ.3,426 கோடி: கடந்த தேர்தலை விட 131 சதவீதம் அதிகம்

மக்களவை தேர்தலுக்கு அரசு செலவு ரூ.3,426 கோடி: கடந்த தேர்தலை விட 131 சதவீதம் அதிகம்
Updated on
1 min read

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.3,426 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிக செலவு கொண்ட தேர்தலாகும்.

2009 பொதுத் தேர்தலில் அரசுக்கு ரூ.1,483 கோடி செலவு ஏற்பட்டது. இந்நிலையில் முந்தைய தேர்தலை காட்டிலும் தற்போது அரசுக்கு 131 சதவீதம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

அரசு செலவு அதிகரித்துள்ளதற்கு, பணவீக்கம் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப் பட்ட பல்வேறு நடவடிக்கைகளே காரணம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. சுயேச்சை வேட்பாளர்களும் அதிக அளவில் போட்டியிட்டனர். வேட்பா ளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அரசின் தேர்தல் செலவும் அதிகரிக்கிறது.

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் நாளுக்கு முன் ‘பூத் ஸ்லிப்’ விநியோகம், வாக்காளர் களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்தது ஆகியவை தேர்தல் செலவை மேலும் அதிகரித்துவிட்டன.

தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலை காட்டிலும் 2009-ல் தேர்தல் செலவு 20 மடங்கு அதிகரித்துள்ளது.

1952-ல் ஒரு வாக்காளருக்கு அரசு 60 காசுகள் செலவிட்டுள்ளது. இது 2009-ல் ரூ.12 ஆக உயர்ந்துள்ளது. 1952-ல் ரூ.10.45 கோடியாக இருந்த தேர்தல் செலவு 2009-ல் 1,483 கோடியாக உயர்ந்துள்ளது.

மக்களவைத் தேர்தலை நடத்து வதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in