திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்!

திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்!
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ள வேளையில், தேர்தலில் போட்டியிட்ட சுமார் 1,650 கட்சிகள் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் படு தோல்விகளைச் சந்தித்துள்ளது.

திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பூஜ்ஜியப் பட்டியலில் உள்ள கட்சிகளாகும். தற்போது நாட்டில் 1,687 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன.

8,200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 5007 வேட்பாளர்கள் பல்வேறு கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். மீதமுள்ளவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். இதில் 35 கட்சிகளிலிருந்து 541 பேர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 பேர் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி பாஜக ஒட்டுமொத்தமாக 17.16 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தமாக தனிப்பட்ட முறையில் 282 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 10.7 கோடி வாக்குகளைப்பெற்றுள்ளது.

வேடிக்கை என்னவெனில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத பகுஜன் சமாஜ் கட்சி 2.3 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது மொத்த வாக்குகளில் 4.1% எடுத்து 3வது கட்சியாக இருக்கிறது!!

நோட்டாவில் சுமார் 60 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 21 கட்சிகள் எடுத்த வாக்குகளை விட அதிகம் என்பது இன்னொரு வேடிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in