Published : 10 May 2014 06:17 PM
Last Updated : 10 May 2014 06:17 PM

மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை வாரணாசியில் முடித்தார் ராகுல் காந்தி

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். இதில் பெறும் திரளான ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.

பல இடங்களில் இவருக்கு கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சுமார் 11 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பேரணி திட்டமிடப்பட்டு துவங்கியது. இஸ்லாமியர்கள் நிறைந்த கோல் கட்டா பகுதியில் ராகுல் காந்தி தனது பேரணியை தொடங்கினார்.

வாரணாசியில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், " மக்கள் பணத்தை பாஜகவும் காங்கிரஸும் எப்படி பயன்படுத்துகிறது என்பது தான் இரு கட்சிகளிடையே உள்ள வித்தியாசம். ஏழை மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்ற நிலையில், நாங்கள் ஊரக வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் கல்வி என பல்வேறு புதிய திட்டங்களை யோசித்தோம். எங்கள் திட்டங்களால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் நன்றி தெரிவிக்கின்றனர்.

ஆனால் பாஜக மக்கள் சொத்து அனைத்தும் தொழிலதிபர்களிடம் போய் சேர வேண்டும் என விரும்புகிறது. பெருநிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு கடன் வழங்குகிறது. குஜராத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சீக்கியர்களை மோடி அரசு விரட்டி அடிக்கிறது. குஜராத்தில் ரூ.26,000 கோடி மதிப்பிலான மின்சாரமும், ரூ.45,000 கோடி மதிப்பிலான விவசாய நிலமும் தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. ஆனால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.30,000 கோடியை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது.

மோடியின் ‘குஜராத் மாடல்' என்பது ஒரு தனி மனிதனை முன்நிறுத்தியே கூறப்படுகிறது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்கள் நாட்டில் உள்ள 70 கோடி மக்களையும் முன்னேற்றக் கூடியவை.

எங்கள் ஆசை எல்லாம், நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள் எல்லாம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாய் இருக்க கூடாது. அவை எல்லாம் சண்டோலியில் தயாரிக்கப்பட்டவையாய் இருக்க வேண்டும். மேலும் நாம் தயாரிக்கும் பொருட்கள் உலக அளவில் சென்றடைய வேண்டும்” என்றார்.

வாரணாசியில் பாஜக சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். வாரணாசிக்கான தேர்தல் 12- ம் தேதி நடக்கவிருப்பதால் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

பாஜக கருத்து: வாரணாசியில் கடந்த வியாழக்கிழமை மோடி பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் லட்சக்கணக்கானவர் பங்கேற்றனர். இன்றைய பேரணி குறித்து பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறுகையில், "ராகுலின் பேரணி காங்கிரஸுக்கு வழி அனுப்பும் விழாவாக அமைந்துள்ளது. மோடி பேரணியின்போது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகள் ராகுலுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x