

நிஜப் புலி யார் என்பது விரைவில் தெரியும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
“காகிதப் புலியான மோடி வங்கப் புலியை எதிர்கொள்ளத் தயாரா?” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சனிக்கிழமை சவால் விடுத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மேற்குவங்கம் பங்குரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
ஒரு காகிதப் புலிக்கே மம்தா இவ்வளவு பயப்படுகிறார். அப்படி யென்றால் நிஜப் புலி அவர் கண் முன் வந்து நின்றால் என்ன செய் வார்? எனக்குப் பழிவாங்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை. மக்களின் வாழ்க்கை மாற வேண் டும். அதுதான் எனது குறிக்கோள்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்க மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்படும். அப்போது வேறு வழியில்லாமல் மம்தா பானர்ஜியும் மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நான் 100 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை அமைத்துக் கொடுத்தால் மம்தா குறைந்தபட்சம் 10 கி.மீட்டர் தொலைவுக்காவது சாலை அமைக்க வேண்டும். நான் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தால் அவர் கண்டிப்பாக 10,000 வீடுகளையாவது கட்டிக்கொடுக்க வேண்டும். காகிதப் புலியின் ஆட்சியில் குஜராத்தில் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்குவங்கத்தில் சிட்பண்ட் ஊழல், ஆசிரியர் பணி நியமன ஊழல் என பல்வேறு ஊழல் விவ காரங்கள் அடுத்தடுத்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. வங்கப் புலி ஆட்சியில் இவ்வளவு ஊழல்கள் ஏன்?.
வெகுவிரைவில் நிஜப் புலி யார், காகித புலி யார் என்பது தெரிந்துவிடும்.
சட்டவிரோத குடியேற்றம்
சுந்தரவன பகுதியில் உள்ள புலிகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மேற்கு வங்கத்தில் குவிந்திருப்பார்கள். ஆனால் இப்போது வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர் கள்தான் அதிகரித்து வருகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதேநேரம் மதரீதியாக வங்கதேசத் தில் இருந்து விரட்டப்பட்டவர்களை இருகரம் நீட்டி வரவேற்போம்.
இவ்வாறு மோடி பேசினார்.