காங்கிரஸ் எதிர்ப்பு அலையையே அறுவடை செய்தது பாஜக: சிபிஎம்

காங்கிரஸ் எதிர்ப்பு அலையையே அறுவடை செய்தது பாஜக: சிபிஎம்
Updated on
1 min read

மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவில், வெறும் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியது.

இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளும் நடைபெற்றது.

இறுதியில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பலமாக வீசிய அலையை தான் பாஜக அறுவடை செய்தது, என்ற முடிவு எட்டப்பட்டது.

இது தவிர, அடுத்த 15 நாட்களுக்குள் கட்சியின் மாநில குழுக்கள், தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகளை சேகரிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 6-ம் தேதிக்குள் மாநில செயற்குழுக்கள் இந்த ஆய்வு அறிக்கைகளை கட்சி மேலிடத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அதன் பின்னர் மத்திய குழு மீண்டும் கூடி தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்குவங்கத்தில் சோபிக்க முடியவில்லை. இதற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதும், பெருமளவிலான வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதுமே காரணம் என்ற புகாரை முன்வைக்கிறது சிபிஎம்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையிலும், மேற்குவங்கத்தில் பாஜகவின் வாக்கு வங்கி கனிசமாக அதிகரித்துள்ள நிலையிலும், அம்மாநிலத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவை பொருத்த வரை கடந்த முறையை விட ஒரு தொகுதியை கூடுதாலக கைப்பற்றி மொத்தம் 5 இடங்களை சிபிஎம் பிடித்துள்ளது. தவிர அவர்கள் ஆதரவு பெற்ற இரண்டு சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சிக்கு கூடுதல் ஆறுதலாக அமைந்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி பெரும்பான்மை பெறுவது வழக்கம்.

இந்த முறையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மோடி பிரதமராக பாஜகவால் முன்நிறுத்தப்பட்ட நிலையில் சிறுபான்மை மக்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே அதிக அளவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in