

பீகாரில் தற்போது நிலவும் அசாதரண சூழலில் 'சமூக நீதி' அரசியலின் மறு பிரவேசம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் படுதோல்விக்குப் பின்னர், பீகாரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெரும் வகையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு ஒரு புதிய முயற்சியையும் செய்திருக்கிறார் நிதிஷ் குமார். அது, ஜித்தன் ராம் மஞ்ஜியை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்திருப்பதாகும்.
2013-ல் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டது தப்புக் கணக்காகியிருக்கிறது. அதன் விளைவு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிரொலித்திருக்கிறது.
மக்கள் நன் நம்பிக்கையை நிதிஷ் குமார் பெற்றிருந்தும் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைய பல்வேறு காரணங்கள் உள்ளன.
தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் துவண்டு விடாமல் இம்முறை சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய இரண்டு கொள்கைகளை தன் கையில் எடுத்துள்ளார் நிதிஷ்.
தேசிய அளவில் இந்துத்துவா கொள்கை மோடி எழுச்சியால் மேலோங்கி இருப்பதாக கருதப்படும் நிலையில் நிதிஷ் எடுத்துள்ள இந்த இரு அஸ்திரங்களும் நன்றாகவே வேலை செய்யும் என்பது அரசியல் நோக்கர்கள் கணிப்பு.
இத்தகைய சூழலில், பீகாரில் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையின் மறுமலர்ச்சி சாத்தியமாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு, காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் ஏன் ராஷ்டிரிய ஜனதா தளமும் தோள் கொடுக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
அப்படியாக உருவாகும் ஒரு புதிய கூட்டணிக்கு நிதிஷ் குமாரே தலைமை வகிப்பார், என்கிறார் ஆசிய வளர்ச்சி ஆய்வு மைய உறுப்பினர் செயலர் சாய்பால் குப்தா.
அதிகாரமளித்தல்:
ஜித்தன் ராம் மஞ்ஜி, முதல்வராக உயர்த்தப்பட்டிருப்பது பீகாரில் உள்ள 15.5% தலித் மக்களுக்கும் நிதிஷ் வெளிப்படையாக அனுப்பியுள்ள சமிக்ஞையாகும். ஜித்தன் ராம் மஞ்ஜி, முஷாஹர் என்ற பிரிவைச் சேர்ந்தவர். பீகாரில் இந்த ஜாதியே பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ஜித்தன் பதவி உயர்வு மூலம் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நிதிஷ் நன்மதிப்பை பெறுவார்.
மக்களவை தேர்தலில், பீகாரைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32% பேர் பாஜகவுக்கு ஆதராவாக வாக்களித்திருந்தாலும் அவர்கள்தான் இப்போது நிதிஷ் குமாரின் இலக்காக இருக்கின்றனர்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் - ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும் ஒன்று சேர நிதிஷ் குமாரின் தேர்தல் கணக்கு தப்பிதமானது.
பீகார் மக்கள் தொகையில் 16.5% வாக்குவங்கி முஸ்லீம்களுடையது. இந்த வாக்குவங்கி காங் - ராஷ்டிரீய ஜனதா தள கட்சிக்கு சாதகமானது. ஆனாலும் இந்த கூட்டணி பெரும் அளவில் வெற்றியை பெற்றுத்தராததால் இப்போது காங்கிரஸ் கவனம் ஐக்கிய ஜனதா தளம் பக்கம் திரும்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தர தயாராக இருப்பதை தெரிவித்தார்.
மஞ்ஜி, தலைமயிலான அரசில் அங்கம் வகிக்கவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவை சோனியா காந்தியே எடுப்பார் என தெரிகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் முஸ்லீம்கள் ஆதரவை பெறுவதோடு, நிதிஷ், கணிசமான அளவில் உயர்வகுப்பினர் ஆதரவையும் பெறுவார். கட்சியின் பிரதான தலைவராக நிதிஷ் குமார் தொடர்ந்து நீடிப்பார்.
தேர்தல் படுதோல்வியால் உடைந்து போய் இருக்கும் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவும் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே இருவரும் தொடர்பில் இருக்கின்றனர். இதுவே சமூக நீதி அரசியல் தழைக்க போதுமானது.
ஆனால், லாலு பிரசாத் முன்வைத்த சமூக நீதி அரசியலுக்கும் நிதிஷ் முன்வைக்கும் அதே கோரிக்கைக்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. நிதிஷ் குமாரின் சமூக நீதி அரசியலில் நல்லாட்சியும் வலுவான இடத்தை தக்கவைத்திருக்கிறது.
2015, பீகார் சட்டமன்ற தேர்தல் நிதிஷ் குமார் நல்லாட்சி, சமூக நீதி ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு நல்ல மாதிரியை மக்கள் முன்னால் வைப்பார். இது பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு நல்ல சவாலாக இருக்கும். பீகார் 2015 தேர்தல், மோடியின் தேர்தல் வீயூகத்திற்கு ஒரு பலப்பரீட்சையாக அமையும்.