

திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான செயல்பாடு களைக் கொண்டிருக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த வேளையில், மம்தா கொல்கத்தாவில் வெள்ளிக் கிழமை நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஊடகத்தின் ஒரு பிரிவினர் எங்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்தபோதிலும், நாங்கள் தனித்து நின்று போராடியுள்ளோம். இதில் மக்கள்தான் ஆட்ட நாயகனாக வந்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி. நாட்டில் மிகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை எங்கள் கட்சி கொண்டிருக்கும்.
அனைத்து ஜாதி, மத, இன மக்களின் ஒற்றுமைக்கு பாடுபடுவோம். பொருளாதார, நிதி ஸ்திரத்தன்மைக்கும், அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் பாடுபடுவோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “எங்களுக்கு எதிராக சிலர் அவதூறு பிரச்சாரம் செய்தாலும், எங்களின் நெறி சார்ந்த அரசியல் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிட்டது.
மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகள் சிறப்பான வெற்றி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது” என்றார் மம்தா.