Published : 18 Apr 2014 08:32 PM
Last Updated : 18 Apr 2014 08:32 PM

தேர்தல் பிரச்சாரங்களை சீர்குலைப்பதாக பாஜக மீது ஆம் ஆத்மி புகார்

தங்கள் கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை சீர்குலைப்பதற்காக பாஜக பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது என்று தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அளித்த புகாரில், 'எங்கள் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை சீர்க்குலைக்க நினைக்கும் பாஜக கட்சியின் உறுப்பினர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அரவிந்த் கேஜ்ரிவால், மனிஷ் சிசோதியா மற்றும் சஞ்ஜய் சிங் ஆகியோர் வாரணாசியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர்களை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இன்று கூட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில், எங்கள் கட்சிக்கு எதிராக கோஷமிட்டு சிலர் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பை பொதுப்படையாக வெளிப்படுத்தாமல் வெறுக்கத்தக்க சைகைகள் மற்றும் தவறான வார்த்தைகளை கூறி பாஜகவினர் எங்கள் பிரச்சாரத்துக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றனர்.

மேலும், நேற்று இரவும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், அதனை ஏற்காத பாஜக, ஆம் ஆத்மிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர் இது போன்ற செயலில் ஈடுப்பட்டிருக்கலாம் என்று கூறியது.

வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் நிலையில், தேர்தல் உள்நோக்கத்தோடு இந்த செயல்களில் காவிக் கட்சிதான் ஈடுப்பட்டு வருகிறது என்பது புலப்படுகிறது.

பாஜகவின் ஏற்க முடியாத இந்த நடத்தைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி எந்த நிலையிலும் அடிப்பணியாது. தேர்தல் பணிகளை சீர்க்குலைக்கும் செயலில் ஈடுப்பட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விரோதிகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய பிரதேசத்தின் இந்தூரில், ஆம் ஆத்மி கட்சியின் சட்ட ஆலோசகர் பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களை சந்தித்தபோது, இளைஞர் ஒருவர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து 'பிரசாந்த் பூஷண் ஒரு பாகிஸ்தான் உளவாளி' என்று கோஷமிட்டார். இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x