Published : 21 Apr 2014 12:49 PM
Last Updated : 21 Apr 2014 12:49 PM

காஷ்மீரில் ஹுரியத் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஹுரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கீலானி, தேர்தலை புறக்கணிக்கும்படியும், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடக்கும் நேரத்தில் அனந்த்நாக், ஸ்ரீநகர், பாராமுல்லா ஆகிய 3 தொகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனை அடுத்து அவரது அறிவிப்பை மேற்கோள்காட்டி வாக்களிப்பதில் இருந்து மக்களை தடுக்கும் முயற்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சில பிரிவினைவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முழு அடைப்பு நடத்துவதாக ஹுரியத் அமைப்பு தெரிவித்தது.

அதன்படி இன்று காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் காஷ்மீரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை. காலையில் இருந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஜம்முவின் சில பகுதிகளில் முழு அடைப்புக்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை.

வரும் 24-ம் தேதி தெற்கு காஷ்மீரிலும், மத்திய காஷ்மீரில் 30-ம் தேதியும், வடக்கு காஷ்மீரில் மே 7-ம் தேதியும் நடைபெறவுள்ள வாக்குப்பதிவை புறக்கணிக்கும் வகையில் பொது ஊரடங்கு முறையை அனுசரிக்கும்படியும் ஹுரியத் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் ஜனநாயக விரோத செயல் என்றும் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x