Published : 20 Apr 2014 10:26 AM
Last Updated : 20 Apr 2014 10:26 AM
மத்திய அமைச்சர் கபில்சிபலின் மகன் அமித் சிபல் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் மே 24ம் தேதி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் 4 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
அந்த தேதியில் ஆஜராகத் தவறினால் வேறு நிர்ப்பந்த நடவடிக்கைகளை நீதிமன்றம் கையாளும் என மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுனில் குமார் சர்மா எச்சரித்தார். கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண், ஷாஜியா இல்மி ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா ஆஜரானார்.
அடுத்த விசாரணை நடக்கும் மே 24-ம் தேதி, வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள இந்த 4 பேரும் தவறாமல் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டியது தங்கள் கடமை. தவறினால் வேறு நிர்ப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மெஹ்ராவிடம் மாஜிஸ்திரேட் தெரிவித்தார். இதனிடையே, வழக்கில் சனிக்கிழமை ஆஜராகாமல் இருக்க அனுமதி தரும்படி கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட், அதற்காக சிசோடியா, பூஷண், இல்மி ஆகியோருக்கு தலா ரூ. 2500 கட்டணம் விதித்தார்.
ஆனால், வழக்கில் ஆஜராகாமல் இருக்க விலக்கு கோரி கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ் திரேட் அவருக்கு அதற்காக கட்டணம் ஏதும் விதிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதால் அவருக்கு இந்த கட்டணத்தை விதிக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் வழக்கு விசாரணையில் தங்களால் கலந்துகொள்ள இயலவில்லை என 4 பேர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் மார்ச் 15ம் தேதி கேஜ்ரிவால், சிசோடியா ஆகியோர் ஆஜராகவில்லை. இதற்காக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், அன்றைக்கு மட்டும் விலக்கு தருவதாக அறிவித்து இருவருக்கும் தலா ரூ.2500 கட்டணம் விதித்தது.
மார்ச் 15ம் தேதியில் பூஷண், இல்மி ஆகியோர் ஆஜராகினர். விசாரணை நடக்கும் ஒவ்வொரு தினத்திலும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்கிற உறுதி மொழியை பெற்றுக்கொண்டு இருவரையும் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT