Published : 10 Apr 2014 09:55 AM
Last Updated : 10 Apr 2014 09:55 AM

வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் துப்பாக்கிகள், குதிரைகள், ஓவியங்கள்: நூல்கள், டிவி, கிரைண்டர், ஏ.சி.களும் சேர்ப்பு

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் துப்பாக்கிகள், குதிரைகள் விலை உயர்ந்த ஓவியங்கள், நூல்கள், நடைபயிற்சி எந்திரங்கள் (டிரேட் மில்) உள்பட பல்வேறு வகையான பொருள்களை வைத்திருப்பதாக தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

உ.பி.யில் போட்டியிடும் பாஜக தேசிய தலைவர் ராஜ் நாத் சிங் 2 ரிவால்வர்களையும், அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான மேனகா காந்தி ஒரு ரைபிளையும் வைத்திருப்பதாகவும் தங்களது வேட்பு மனுவில் கூறி உள்ளனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களான தேவிந்தர் குமார செரவத், பரிவீன் அமானுல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஸ்ரீ பகவான் சிங் குஷ்வாஹா, பாஜகவின் சர்வேஷ் குமார் உள்ளிட்ட சுமார் 100 பேர் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கூறி உள்ளனர்.

ரூ.1.5 கோடி ஓவியம்

பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட் பாளர் நந்தன் நிலகேனி தன்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பில் ஓவியம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அரபு குதிரைகள்

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் முன்னாள் மூத்த தலை வருமான ஜஸ்வந்த் சிங் தன்னிடம் 3 அரபு குதிரைகள், 51 பசு மாடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜகவில் விரும்பிய தொகுதி கிடைக்காததால் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

மேற்குவங்கத்தில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும் வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, சொத்து பட்டியலில் தன்னிடம் உள்ள நூல்களை வரிசைப்படுத்தி உள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, தன்னிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நடைபயிற்சி எந்திரம், 3 ஏ.சி., கிரைண்டர், 2 டிவிடி பிளேயர்கள், 4 டிவிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x